ஜனாதிபதி தேர்தல் – டிரம்பை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு தேடும் 5 பெண்கள்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்பை தோற்கடிக்க ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்க 5 பெண்கள் வாய்ப்பு தேடுகிறார்கள்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி டிரம்ப் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது.

தற்போது வரை அக்கட்சியை சேர்ந்த 12 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களில் 5 பேர் பெண்கள் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி. கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், முதல் இந்து எம்.பி.யுமான துளசி கப்பார்ட், நியூயார்க் எம்.பி. கிர்ஸ்டன் கில் பிராண்ட், மாசசூசெட்ஸ் எம்.பி. எலிசபெத் வாரன் மற்றும் மின்னசோட்டா எம்.பி. அமி குளோப்சர் ஆகிய 5 பெண்கள் களத்தில் இருக்கிறார்கள்.

அமெரிக்க வரலாற்றில் இதுவரை பெண் ஒருவர் ஜனாதிபதி ஆனது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனின் மனைவி ஹலாரி கிளிண்டன் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தால் முதல் பெண் ஜனாதிபதி என்ற அந்தஸ்தை பெற்றிருப்பார். ஆனால் நூலிழையில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார்.

இந்த நிலையில் ஜனநாயக கட்சியில் களத்தில் உள்ள 5 பெண்களில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டால் டிரம்ப் மீண்டும் ஒரு பெண்ணை எதிர்த்து போட்டியிட வேண்டிய சூழல் ஏற்படும்.

டிரம்ப் பெண்களை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டிருப்பதால், அவருக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுவதாக கூறப்படுகிறது.

எனவே டிரம்பை எதிர்த்து போட்டியிட பெண் வேட்பாளரையே ஜனநாயக கட்சி தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள பெண்களை டிரம்ப் விமர்சித்து வருகிறார்.

மாசசூசெட்ஸ் எம்.பி. எலிசபெத் வாரன் குறித்து அவர் கூறுகையில், “அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டவர் என்கிற ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு எலிசபெத் வாரன், தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். இதை சுட்டிக்காட்டி அவர் வாக்குகளை பெற முடியாது” என்றார்.

அதே போல் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு போட்டியிடும் மற்ற பெண்களான கிர்ஸ்டன் கில் பிராண்ட், அமி குளோப்சர், துளசி கப்பார்ட் ஆகியோரையும் டிரம்ப் விமர்சிக்க தவறவில்லை.

அதே சமயம் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிசை சிறந்த போட்டியாளர் என டிரம்ப் கூறுகிறார்.

-athirvu.in