நைஜீரியாவில் பயங்கரவாத அமைப்பினருக்கும் ராணுவத்திற்குமிடையே ஏற்பட்ட சண்டையில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் நைஜீரியாவின் பனி யாட் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ தளத்தின் மீது போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் நேற்று அதிரடியாக தாக்குதல் நடத்தினர். 4 துப்பாக்கி டிரக்குகள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வந்து தாக்கினர். இந்த தாக்குதலுக்கு ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவம் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனையடுத்து பயங்கரவாதிகளிடம் இருந்த ஆயுதங்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை ராணுவத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
முன்னதாக, கடந்த 15ம் தேதி மைதுகுரியில் உள்ள மசூதியின் அருகில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்த அமைப்பைச் சேர்ந்த 3 தற்கொலை படையினர், உட்பட 11 பேர் பலியாகினர்.
போகோ ஹராம் அமைப்பு ஆப்பரிக்காவின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த அமைப்பு 2009ம் ஆண்டு நைஜீரியாவின் அரசினை எதிர்த்து உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
-athirvu.in