ஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெண்ணுக்கெதிராக டிரம்ப்பின் அதிரடி உத்தரவு!

அமெரிக்காவின் அலபாமா பகுதியில் இருந்து சென்று ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் இணைந்த பெண் மீண்டும் நாடு திரும்ப முடியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அலபாமா பகுதியைச் சேர்ந்த ஹோடா முத்தானா(24) , சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் இணைய விரும்பினார். இதற்காக துருக்கியில் உள்ள பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி சிரியா சென்றார். பின்னர் இறுதிக்கட்ட தாக்குதலின்போது கைது செய்யப்பட்டார். இதேபோல் மேலும் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சமீபத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சிரியாவில் பிடிபட்ட ஐஎஸ் இயக்கத்தினரை நாடு திரும்ப அனுமதித்து அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என லண்டன் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளை கேட்டுக்கொண்டார். அப்படி செய்யாவிட்டால், அமெரிக்கா தலைமையிலான குர்திஷ் படையினர் அவர்களை விடுவிக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஹோடா முத்தானா நாடு திரும்பக் கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அவரை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க கூடாது என வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோவிற்கு தகவல் அனுப்பப்பட்டதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பெண்ணின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டதாகவும், மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்ப இயலாது எனவும் மைக் பாம்பியோ ஏற்கெனவே கூறியிருந்தார். ஆனால், அவரிடம் அமெரிக்க குடியுரிமை இருப்பதாக அவரது வழக்கறிஞர் ஹசான் ஷிப்ளி கூறியுள்ளார்.

‘ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை நாடு திரும்ப அனுமதிக்கும்படி டிரம்ப் கேட்டுக் கொண்டார். தற்போது அமெரிக்கா என வரும்போது முரண்பாடான கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் முத்தானாவிடம் முறையான அமெரிக்க பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்க குடியுரிமைக்கான ஆவணம் உள்ளது’ என்றும் ஹசான் ஷிப்ளி தெரிவித்துள்ளார்.

-athirvu.in