பிஎஸ்சி பூர்வாங்க அறிக்கை வியாழனன்று தாக்கல் செய்யப்படும்

தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் (பிஎஸ்சி) பூர்வாங்க அறிக்கை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களின் கருத்தைச் செவிமடுக்கும் ஆறு நிகழ்வுகளில் இரண்டு முடிந்துள்ளது என்றும் அவற்றில் கிடைத்த பின்னூட்டங்கள் திருப்தி அளிப்பதாகவும் பிஎஸ்சி தலைவர் டாக்டர் ஜேம்ஸ் ஒங்கிலி கூறினார்.

“100-க்கு மேற்பட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் முதன்மையானவற்றையும் முக்கியமானவற்றையும் இனி தேர்ந்தெடுக்க வேண்டும்.

“அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வாக்கில் நாங்கள் அறிக்கையைச் சமர்பிக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டத்திலேயே பூர்வாங்க அறிக்கையைத் தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு கேட்டிருக்கிறோம்”, என்று புத்ரா ஜெயாவில் மீமோஸ் பெர்ஹாட்டுக்கும் 13 மின், மின்னியல் தொழில்நிறுவனங்களுக்குமிடையில் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்தான நிகழ்வைக் கண்ணுற்ற  பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்

பொதுமக்களின் கருத்துகளைச் செவிமடுக்கும் முதல் நிகழ்வு நவம்பர் 11-இல் நாடாளுமன்ற இல்லத்திலும் இரண்டாவது நிகழ்வு நவம்பர் 25-இல் சாபாவிலும் நடைபெற்றது.

அடுத்து சரவாக்கிலும் (டிசம்பர்8-9), பினாங்கிலும் (டிசம்பர் 15-16), கிளந்தானிலும் (ஜனவரி 7-8) ஜோகூரிலும் அக்குழு பொதுமக்களின் கருத்துகளைச் செவிமடுக்கும்.

TAGS: