அணுஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி அளிக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையேயான 2-வது சந்திப்பு வியட்நாமின் ஹனோய் நகரில் வருகிற 27, 28 தேதிகளில் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுமூச்சில் நடந்து வருகின்றன. இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய டிரம்ப், அணுஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி அளிக்கவில்லை என கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
வியட்நாமில் நடைபெற உள்ள கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இது தொடர்பாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். வியட்நாம் சந்திப்பு குறித்து தீர்க்கமாக ஆலோசித்தோம். இந்த சந்திப்பில் பல விஷயங்கள் வெளிவரும் என நம்புகிறேன். அணுஆயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு காலக்கெடு நிர்ணயித்து வடகொரியாவுக்கு நாங்கள் நெருக்கடி தரவில்லை. ஆனால் அது விரைவில் நடக்க வேண்டும் என பலரும் விரும்புகிறார்கள். அது நிச்சயம் நடக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-athirvu.in