வெனிசுவேலா நெருக்கடி: எல்லையில் கலவரம், அணி மாறும் காவல் படையினர்

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுவேலாவுக்குள் உதவிப்பொருட்களை கொண்டு வரும் நோக்கில், வெனிசுவேலா – கொலம்பியா எல்லையில் இருந்த ராணுவ வீரர்கள் சிலர் காவல் சோதனைச் சாவடிகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என கொலம்பியாவின் குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது.

கொலம்பியாவுக்கு வேலை தேடிச் செல்ல முயன்ற வெனிசுவேலா மக்கள் சிலரை எல்லையைக் கடக்க விடாமல் தடுக்க, அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை எல்லையில் இருந்த காவல் படையினர் வீசிய சம்பவமும் இன்னொரு இடத்தில் நடந்துள்ளது.

மனிதாபிமான உதவிகளைச் சுமந்து வரும் சரக்கு வாகனங்களை வெனிசுவேலாவுக்குள் நுழைய அதிபர் நிகோலஸ் மதுரோ தலைமையிலான அரசு தொடர்ந்து மறுத்து வருவதால் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

வெனிசுவேலாசனிக்கிழமையன்று எல்லையைக் கடந்தால் கொலம்பியா அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட வெனிசுவேலா காவல் படையினர் இருவர்.

கொலம்பியா உடனான எல்லையையும் வெனிசுவேலா அரசு பெரும்பாலும் மூடியுள்ளது.

வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராகத் தம்மைத் தாமே பிரகடனம் செய்துகொண்டுள்ள எதிர்க் கட்சித் தலைவர் குவான் குவைடோ மருந்து மற்றும் உணவுப்பொருட்களை உள்ளடக்கிய மனிதாபிமான உதவிகளை ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மூலம் வெனிசுவேலாவுக்குள் விநியோகம் செய்ய உதவுவார்கள் என்று சனிக்கிழமை தெரிவித்தார்.

உதவிகளைச் சுமந்துவரும் சரக்கு வாகனங்களுக்கு வழிவிடுமாறு காவல் படையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ள குவான் குவைடோ, “காவல் சாவடிகளில் இருந்து வெளியேறியவர்கள் தங்கள் கடமையைச் செய்யாமல் விட்டுச் சென்றவர்கள் அல்ல, மக்களுடன் இருக்கத் தேர்வு செய்தவர்கள்,” என்று கூறியுள்ளார்.

கொலம்பியா செல்ல எல்லையைக் கடக்கும் நோக்கில், தடுப்புகளை வெனிசுவேலா குடிமக்கள் சிலர் தாண்டி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

வெனிசுவேலாவை விட்டு கொலம்பியாவுக்குள் செல்ல தங்களை அனுமதிக்குமாறு, எல்லையில் கூடியுள்ள மக்கள் காவல் படையினரிடம் மன்றாடுவதாக வெனிசுவேலா – கொலம்பியா எல்லையில் இருந்து பிபிசி செய்தியாளர் ஒர்லா குரின் கூறுகிறார்.

குவான் குவைடோகுவான் குவைடோ

எல்லையில் உள்ள காவல் சாவடிகள் மற்றும் கலவரத் தடுப்பு காவல் மையங்கள் மீது போராட்டக்காரர்கள் தீ மூட்டும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

வெனிசுவேலாவில் என்ன சிக்கல்?

கடந்த சில ஆண்டுகளாகவே அடிப்படைப் பொருட்களான உணவு மற்றும் மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

சிக்கல் தீவிரமான 2014 முதல், மக்கள்தொகையில் சுமார் 10% உள்ள 30 லட்சம் மக்கள் வெனிசுவேலாவை விட்டு வெளியேறியுள்ளனர் என்கிறது ஐ.நா.

நிகோலஸ் மதுரோவெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ

சுமார் மூன்று லட்சம் வெனிசுவேலா மக்கள் இறக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக குவைடோ கூறுகிறார்.

2013 முதல் பதவியில் இருக்கும் மதுரா, கடந்த ஆண்டு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். எனினும், தேர்தல் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த தேசிய அவையின் தலைவர் குவைடோ தம்மை இடைக்கால அதிபராக ஜனவரி 23 அன்று அறிவித்துக்கொண்டார்.

வெனிசுவேலாவின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ள அந்நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனமான பி.டி.வி.எஸ்.ஏ-க்கு எதிரான நடவடிக்கைகள் உள்பட, வெனிசுவேலாவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது.

-BBC_Tamil