வெனிசுவேலா நெருக்கடி: வெளியேறிய 30 லட்சம் பேர்,உச்சத்தில் போராட்டம் – என்ன நடக்கிறது?

கொலம்பியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வரும் உதவிப் பொருட்களை வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ தடுத்து நிறுத்தியதால் அந்நாட்டின் எல்லைப்புற நகரங்களில் கடும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

உதவிப் பொருட்களை பெற வந்த மற்றும் கொடுக்க வந்த மக்கள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டையையும், ரப்பர் குண்டுகளையும் வீசினர்.

இந்த கலவரத்தில் பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட்து என மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சியினர் இந்த உதவி பொருட்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இடங்களுக்கு சென்றடைய வேண்டும் என தெரிவிக்கின்றனர் ஆனால் இது பாதுகாப்பு அச்சுறுத்தல் என்கிறார் மதுரோ.

அமெரிக்கச் செயலர் மைக் பாம்பேயோ பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராகத் தம்மைத் தாமே பிரகடனம் செய்துகொண்டுள்ள எதிர்க் கட்சித் தலைவரும், இந்த உதவிகளை பெற ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவருமான குவான் குவைடோ, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

டஜன் கணக்கான நாடுகளால் தலைவரா ஏற்றுக் கொள்ளப்பட்ட குவைடோ அமெரிக்க துணை அதிபரை சந்திக்க திங்களன்று கொலம்பியா செல்லவுள்ளார்.

வெனிசுவேலா

மதுரோ அரசாங்கத்தால் இவர்மீது பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், வெனிசுவேலா நெருக்கடியை தீர்க்க அமைக்கப்பட்ட, 12 லத்தின் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகள் அடங்கிய லிமா அமைப்பின் தலைவர்களை சந்திக்கவுள்ளார் குவைடோ.

குவான் குவைடோ, டன் கணக்கான மருந்து மற்றும் உணவுப்பொருட்களை வெளிநாடுகளின் உதவியோடு ஒருங்கிணைத்து அதனை வெனிசுவேலாவுக்குள் சனிக்கிழமைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆனால் அதிபர் மதுரோ இதனால் நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று பிரேசில் மற்றும் வெனிசுவேலாவுடனான எல்லையை மூடிவிட்டார்

ஆனால் உணவு மற்றும் மருந்து பொருட்கள் கொண்ட உதவி பொருட்களை பெற எல்லையைத் தாண்டும் முயற்சியில் வெனிசுவேலா மக்கள் ஈடுபட்டனர்.

எல்லைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், தன்னார்வலர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதும், போராட்டக்காரர்கள் சோதனைச் சாவடிகளை எரிப்பதும் எரிப்பொருட்களை பாதுகாப்பு படையினர் மீது வீசுவதும் தெரிகிறது.

14 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது மனித உரிமை மீறல் என்றும், சர்வதேச சட்ட்த்தின்படி குற்றம் என்றும் அம்னெஸ்டி தெரிவித்துள்ளது.

வெனிசுவேலாவில் என்ன சிக்கல்?

வெனிசுவேலா

கடந்த சில ஆண்டுகளாகவே அடிப்படைப் பொருட்களான உணவு மற்றும் மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

சிக்கல் தீவிரமான 2014 முதல், மக்கள்தொகையில் சுமார் 10% உள்ள 30 லட்சம் மக்கள் வெனிசுவேலாவை விட்டு வெளியேறியுள்ளனர் என்கிறது ஐ.நா.

சுமார் மூன்று லட்சம் வெனிசுவேலா மக்கள் இறக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக குவைடோ கூறுகிறார்.

2013 முதல் பதவியில் இருக்கும் மதுரோ, கடந்த ஆண்டு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். எனினும், தேர்தல் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த தேசிய அவையின் தலைவர் குவைடோ தம்மை இடைக்கால அதிபராக ஜனவரி 23 அன்று அறிவித்துக்கொண்டார்.

வெனிசுவேலாவின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ள அந்நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனமான பி.டி.வி.எஸ்.ஏ-க்கு எதிரான நடவடிக்கைகள் உள்பட, வெனிசுவேலாவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது. -BBC_Tamil