வட கொரியா அணு ஆயுதத்தை கைவிட்டால் பொருளாதாரத்தில் சக்தி மிக்க உலக நாடுகளில் ஒன்றாக மாறும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
இது குறித்து டிவிட்டரில் கருத்துத் தெரிவித்த டிரம்ப் வேறெந்த நாட்டையும் விட அதிவேகமாக வளரும் வாய்ப்பு வடகொரியாவுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வடகொரியா இன்னமும் ஓர் அணு ஆயுத அபாயம்தான் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பேயோ தெரிவித்த சில மணி நேரங்களில் அமெரிக்க அதிபரின் கருத்து வெளியாகியுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இருவரும் இரண்டாவது முறையாக நேருக்கு நேர் சந்தித்துப் பேசவுள்ளனர். வியட்நாம் தலைநகர் ஹனோயில் இந்த சந்திப்பு வரும் 27-28 தேதிகளில் நடக்கவுள்ளது.
- “அணுஆயுதங்களை கைவிடுவதற்கு வாய்ப்பேயில்லை” – வட கொரியா
- போப் பிரான்சிஸ் வட கொரியா வரவேண்டும்: கிம் ஜாங் உன் அழைப்பு
“சிங்கப்பூரில் நடந்த முதல் உச்சிமாநாட்டில் ஏற்பட்ட முன்னேற்றம் தொடரவேண்டும் என்று நாங்கள் இருவரும் எதிர்பார்க்கிறோம்” என்று டிரம்ப் தமது டிவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் தாமும் வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னும் சிங்கப்பூரில் முதல் முறையாக நேருக்கு நேர் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை பற்றியே டிரம்ப் இந்த டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த அமெரிக்க மாகாண ஆளுநர்களுக்கான நடன நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப் தமக்கும் கிம்முக்கும் நல்லதொரு உறவு உருவாகியிருப்பதாக குறிப்பிட்டார்.
அணு ஆயுதங்களை அழிப்பதற்கு தாம் வடகொரியாவை அவசரப்படுத்தவில்லை என்று மீண்டும் தெளிவுபடுத்திய டிரம்ப், புதிய சோதனைகள் நடப்பதைத் தாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்தார். புதிய அணு ஆயுத சோதனைகள் நடைபெறாதவரை தங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று தெரிவித்தார்.
அமெரிக்க – வடகொரிய அதிபர்கள் முதல் முறையாக சந்தித்து நடத்திய பேச்சு என்ற அளவில் சிங்கப்பூர் உச்சிமாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. ஆனால் அந்த மாநாட்டில் இருதரப்பும் கையெழுத்திட்ட உடன்பாடு மேம்போக்கானதாக, துல்லியமான விவரங்கள் இல்லாததாக அமைந்திருந்தது. கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்றதாக மாற்றுவது என்ற அந்த உடன்படிக்கையின் இலக்கினை எட்டுவதற்கு பெரிய முன்னேற்றம் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை.
இந்நிலையில்தான் இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. -BBC_Tamil