டிரம்ப் – கிம் உச்சிமாநாடு: தடைகளை முழுமையாக நீக்கும்படி அமெரிக்காவை கோரவில்லை – வட கொரியா

தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தடைகளையும் முழுமையாக நீக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் கேட்கவில்லை, ஒரு பகுதியளவு தடைகளை நீக்கும்படியே கேட்டதாக வட கொரியா கூறியுள்ளது.

வியட்நாமில் நடந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் – கிம் உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இதனை தொடர்ந்து பேசிய வட கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யொங் ஹோ, “நாங்கள் முழுத்தடைகளை நீக்குமாறு கோரிக்கை வைக்கவில்லை. பிரதான அணுஆயுத தளத்தை முடக்கியதற்கு பதிலாக ஒரு பகுதி தடைகளை நீக்குமாறு கேட்டுக் கொண்டோம்” என்றார்.

ஆனால், அதற்கும் அமெரிக்கா மறுத்துவிட்டது.

யோங்ப்யோன் தளத்தை முழுமையாக அகற்ற கிம் முன்வந்தார். ஆனால், அதற்கு பதிலாக வட கொரியா மீதான தடைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று அவர் கூறியதாகவும், அதற்கு அமெரிக்கா தயாராக இல்லை என்றும் பேச்சுவார்த்தை தோல்விக்கு பிறகு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

நாங்கள் பகுதியளவு தடையை நீக்கவே கேட்டோம் : வட கொரியா

வியாழக்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரி யொங் ஹோ, அமெரிக்க கண்காணிப்பில் யோங்ப்யோன் தளத்தை முழுமையாக அகற்றுவது போன்ற யதார்தமான சில முன்மொழிவுகளை தங்கள் நாடு முன்வைத்தாக கூறினார்.

ரி யொங் ஹோ,

“வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையே இருக்கும் தற்போதைய நம்பிக்கை அளவின் அடிப்படையில், நாம் முன்வைத்த மிகப்பெரிய முன்மொழிவு இது. அதற்கு பதிலாக பொதுமக்களின் நலனுக்காக பகுதியளவு தடைகளை நீன்ன வேண்டும் என்று கேட்டிருந்தோம்” என்றார்.

தொலைதூர ஏவுகனை சோதனைகளையும், அணு சோதனைகளையும் முற்றிலும் நிறுத்த வடகொரியா ஒப்புக்கொண்டது. இதற்கு பிறகு இதுபோன்ற உச்சிமாநாடு நடக்கும் வாய்ப்பு கிடைப்பது கடினமானது என்று செய்தியாளர்களிடம் பேசிய ரி தெரிவித்தார்.

“எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா அழைத்தாலும், எங்கள் தரப்பில் எந்த மாற்றமும் இருக்காது” என்றும் அவர் கூறினார்.

உச்சிமாநாடு தோல்வி அடைந்தது ஏன்?

ஜோனாதன் ஹெட், பிபிசி, ஹனொய்

இந்த உச்சிமாநாட்டின் தோல்வியை, அதிபர் டிரம்ப் தத்துவார்த்த ரீதியாகவே அணுகினார் ஓரளவு இந்த முடிவை எதிர்பார்த்தார். பேச்சுவார்த்தை முறிந்த பிறகு வடகொரியா அளந்தே பேசுகிறது. இந்தத் தோல்வியானது, அதில் பங்கேற்றவர்களுக்கு சற்று அதிர்ச்சி என்றே கூறலாம்.

உச்சிமாநாட்டிற்கு சில வாரங்களுக்கு முன் இரண்டு தரப்பு பேச்சுவார்த்தைகளிலும் சிறு இடைவெளிகள் இருந்ததாகவும், அவர்கள் ஒன்றாக சந்தித்து பேசினால், அது சரியாகி விடும் என்று நம்பியதாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பையோ கூறினார். -BBC_Tamil