அலபாமா சூறாவளி: லீ வட்டாரத்தில் மீண்டும் தொடங்கிய மீட்பு பணிகள், 23 பேர் பலி

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு சூறைக் காற்றுகள் தாக்கியதில் குழந்தைகள் உள்பட குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கட்டடங்கள், சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளன.

இறந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. டஜன்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் காற்று வீசியது. உயிர் தப்பியுள்ளவர்களைத் தேடும் பணி ஒரு நாளுக்கு பின் மீண்டும் தொடங்கியுள்ளது.

அலபாமா மற்றும் அருகில் உள்ள ஜார்ஜியா மாகாணங்களில் 20 ஆயிரம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அலபாமாவில் சூறாவளி

நான்கு குழந்தைகளோடு தாம் ஒரு காரில் மாட்டிக்கொண்டதாகவும், தமது மனைவி மேலும் இருவரோடு மாட்டிக்கொண்டதாகவும் பெயர் தெரியாத அலபாமா பிரஜை ஒருவர் கூறியுள்ளார்.

சூறாவாளியின் பாதையில் பல மைல் தொலைவுக்கு பேரழிவு ஏற்பட்டதாக லீ கவுண்டி என்ற பகுதியின் ஷெரீஃப் ஜே ஜோன்ஸ் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த மாநிலம் முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிக்கு உதவிகள் குவிந்து வருகின்றன.

சூறாவளி பாதிப்பு

உயிரோடு இருப்போரை இனம்காண ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மீட்பதவி பணிகளில் ஆபத்து அதிகமாக இருப்பதால், இரவு நேரம் நிறுத்தப்பட்ட மீட்பு பணிகள், மீண்டும் அடுத்த நாள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. -BBC_Tamil