பெண்களை கண்காணிப்பதற்கென்றே ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறது செளதி என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்த கூகுள் நிறுவனம், ஒரு அமெரிக்க காங்கிரஸ் பெண் உறுப்பினரிடம், அந்த செயலி தங்கள் சட்ட திட்டத்திற்கு எதிரானது அல்ல என்று கூறியதாக அந்த உறுப்பினர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அப்ஷர் செயலி
பெண்கள் எங்கெல்லாம் பயணிக்கிறார்கள் என்று ‘அப்ஷர்’ என அழைக்கப்படும் அந்த, சௌதியில் உருவாக்கப்பட்ட, செயலியைக் கொண்டு கண்காணிக்க முடியும்.
இந்த செயலியானது கூகுள் ஆப் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் கிடைக்கிறது.
இந்த செயலியானது மனித உரிமைகளை மீறுகிறது என செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.
இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் புகார் அளித்ததாகவும், பின் அவர்களிடம் ஓர் உரையாடலை நடத்தியதாகவும் ஜாக்குலின் ஸ்பியர் எனும் காங்கிரஸ் உறுப்பினர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக கூகுள் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இந்த செயலி கடந்த சில ஆண்டுகளில் மில்லியன் கணக்கான மக்களால் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
அரசு அளிக்கும் சேவைகளை பெற இந்த செயலி உதவுகிறது. இந்த செயலி தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுமென பிப்ரவரி மாதம் ஆப்பிள் நிறுவனம் கூறி இருந்தது.
செளதி மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
இரு நிறுவனங்கள் அளித்த பதிலும் திருப்தியாக இல்லை என்று ஜாக்குலின் ஸ்பியர் கூறுகிறார்.
செளதியில் இந்த செயலி தொடர்பாக கலவையான விமர்சனங்கள் உள்ளன.
ஒருவர் இந்த செயலிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், “எப்படியாக இருந்தாலும், ஆண்களின் அனுமதி பயணிப்பதற்கு தேவை. இந்த செயலி அதனை சுலபமாக ஆக்குகிறது” என பதிவிட்டுள்ளார். -BBC_Tamil