அமெரிக்காவின் அலபாமாவை புரட்டிப் போட்ட டோர்னிடோ புயல்கள்! : 23 பேர் வரை பலி

டுவிஸ்டர் அல்லது டோர்னிடோ என அழைக்கப் படும் சூறைக் காற்றினால் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் அதிகளவு பாதிக்கப் படும் பகுதிகளில் ஒன்று அலாபாமா ஆகும்.

அமெரிக்காவின் தென் கிழக்கே உள்ள இங்கு செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து வலிமையான டோர்னிடோ புயல்கள் தாக்கியுள்ளன. ஒரு கிராமப்புற சமூகம் வசிக்கும் குடியிருப்பைக் கடந்து சென்ற இப்புயலால் குழந்தைகள் உட்பட 21 பேர் வரை பலியாகி உள்ளனர்.

மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரும் இதில் பலியாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் புயலானது கடந்த 6 வருடங்களில் அமெரிக்காவைத் தாக்கிய மிக வலிமையான சூறைக் காற்று என்றும் இதன் போது 170mph வேகத்தில் காற்று வீசியதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு அருகே இருந்து உயிர் தப்பிய வயது குறைந்த நபர் 6 வயது சிறுவன் என்றும் வயதான நபர் 89 வயதாகும் முதியவர் ஒருவர் என்றும் கூடத் தெரிய வருகின்றது.

இதற்கு முன்பு மே 2013 இல் அமெரிக்காவின் மூர் ஒக்லஹோமாவைத் தாக்கிய டோர்னிடோவால் 24 பேர் கொல்லப் பட்டதே மிக மோசமான புயல் அனர்த்தமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இம்முறை இந்த சூறைக் காற்றின் தாக்கம் ஜோர்ஜியா, தெற்கு கரோலினா மற்றும் புளோரிடா ஆகிய நகரங்களிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காயம் அடைந்தவர்களில் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதுடன் பொருள் சேதமும் அதிகளவில் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

-4tamilmedia.com