பலூசிஸ்தானில் எரிவாயு பைப்லைனுக்கு தீ வைப்பு- பலூச் விடுதலைப் புலிகள் பொறுப்பேற்றது!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள எரிவாயு பைப்லைனுக்கு தீ வைத்த சம்பவத்திற்கு பலூச் விடுதலைப் புலிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலூசிஸ்தானில் உள்ள தேரா பக்தி பகுதியில் இருந்து பாகிஸ்தானின் பிற பகுதிகளுக்கு பைப் லைன் மூலம் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. நேற்று சுயி எரிவாயு ஆலைக்கு அருகே உள்ள பைப்லைனை மர்ம நபர்கள் தகர்த்துள்ளனர். இதனால் பயங்கர சத்தத்துடன் பைப்லைன் வெடித்து, தீப்பிடித்தது.

இதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், 2 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

இந்த சம்பவத்திற்கு பலூசிஸ்தான் விடுதலைக்காக போராடி வரும் பலூச் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதேபோல் சுயி எரிவாயு வயலில் உள்ள பைப்லைனை ஒரு கும்பல் உடைத்து தீவைத்துள்ளது. இதற்கு பலூச் குடியரசு ராணுவம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தங்கள் பகுதியின் இயற்கை வளங்களை பாகிஸ்தான் சுரண்டுவதாகவும், எரிவாயுவை பஞ்சாப் பகுதிக்கு கொண்டு செல்வதால் தங்கள் பகுதி மக்களுக்கு எரிவாயு கிடைப்பதில்லை என்றும் குற்றம்சாட்டி தொடர்ந்து தாக்குதல் நடத்துவது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in