நொறுங்கி விழுந்த எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

விழுந்து நொறுங்கிய எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நொறுங்கி விழந்த இடத்தில் இருந்து போயிங் 737 ரக விமானத்தின் கறுப்புப் பெட்டி மற்றும் விமானி அறையில் உள்ள குரல் பதிவு கருவியும் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மணி 8.44க்கு கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், எட்டு விமான ஊழியர்கள் உள்பட விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தினையடுத்து அங்கு பல விமானங்கள் தரையிரக்கப்பட்டன.

அந்த விமானத்தில்கென்யா, எத்தியோப்பியா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்தனர்.

நடந்தது என்ன?

கறுப்புப் பெட்டி

எத்தியோப்பிய விமானம் விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் விமான ஓட்டுநர் சில சிரமங்களை சந்தித்ததாக தெரிவித்ததையடுத்து மீண்டும் அடிஸ் அபாபா விமான நிலையத்துக்கே திரும்பும்படி அவரிடம் கூறப்பட்டிருந்த சூழலில் இந்த விபத்து ஏற்பட்டது என எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

“தற்போதைய சூழலில் எதுவும் சொல்ல முடியாது. விசாரணைக்கு காத்திருக்க வேண்டும்” என எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குனர் டெவோல்டே ஜெப்ரிமரியம் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான விமானம் பற்றி நமக்கு என்ன தெரியும்?

கறுப்புப் பெட்டி

2017ஆம் ஆண்டிலிருந்துதான் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் வணிக செயல்பாட்டுக்கு வந்தது.

விமான சேவையை விரிவாக்கம் செய்வதற்கு ஆறு விமானங்களை எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் இயக்கியது. அந்த ஆறு விமானங்களில் நொறுங்கி விழுந்த விமானமும் ஒன்று. கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று “கடுமையான முதல் சோதனைக்கு” அந்த விமானம் உட்படுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தால் மிகவும் வருந்துவதாக தெரிவித்துள்ள போயிங், தொழில்நுட்ப உதவிக்காக ஒரு குழுவை அனுப்புவதாகவும் கூறியது.

737 மேக்ஸ் 8 விமானம் விபத்துக்குள்ளாவது கடந்த ஐந்து மாதங்களில் இது இரண்டாவது முறையாகும். கடந்த அக்டோபரில் லயன் விமான சேவை விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் உயிரிழந்தவர்கள் யார்?

கென்யர்கள் 32 பேர், கனடியர்கள் 18 பேர், எத்தியோப்பியர்கள் 9 பேர், இத்தாலியர்கள் 8 பேர், சீனர்கள் 8 பேர், அமெரிக்கர்கள் 8 பேர், பிரிட்டானியர்கள் 7 பேர், பிரெஞ்சுக்காரர்கள் 7 பேர், எகிப்தியர்கள் 6 பேர், ஜெர்மனியர்கள் 5 பேர், ஸ்லோவாகியர்கள் 4 பேர் மற்றும் இந்தியர்கள் 4 பேர் இதில் பயணித்துள்ளனர்.

ஐநா சபையை சேர்ந்த சிலரும் இந்த விமானத்தில் பயணித்ததாக நம்பப்படுகிறது. அவர்கள் நைரோபியில் நடைபெறும் சுற்றுச்சூழல் சபை அமர்வுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

கறுப்புப் பெட்டி

“பல ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய பேரழிவுகளில் இதுவும் ஒன்று” என ஜெனிவாவின் ஜநா அலுவலக பொது இயக்குநர் தெரிவித்தார்.

அடுத்து என்ன நடக்கும்?

அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் மற்றும் போயிங் வல்லுநர்களுடன் எதியோப்பிய அதிகாரிகள் விசாரணையை முன்னெடுப்பார்கள்.

பாதுகாப்பு எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, அடுத்த அறிவிப்பு வரும்வரை, அனைத்து 732 மேக்ஸ் 8 ரக விமான சேவையும் நிறுத்தப்படும் என எத்தியோப்பிய விமான சேவை அறிவித்துள்ளது.

எத்தியோப்பியா

இதே வேளையில், 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் இயக்குவதை நிறுத்துமாறு உள்ளூர் விமான சேவைகளுக்கு சீன விமான ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல உள்ளூர் விமான சேவைகளில் இந்த ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தனது இரண்டு போயிங் விமானங்கள் இயக்குவதை நிறுத்தி வைக்க கேய்மன் விமான சேவை உத்தரவிட்டுள்ளது -BBC_Tamil