புதிய நிபந்தனை விதிக்கிறார் டிரம்ப் – சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் போடுமா?

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்பதில் நம்பிக்கையாக உள்ளதாகவும், அமெரிக்காவுக்கு நன்மை அளிக்கும் என்றால் மட்டும்தான் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவேன் என டிரம்ப் கூறினார்.

அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக உறவில் விரிசல் விழுந்துள்ளது. இதன் காரணமாக சீன பொருட்கள் மீது அமெரிக்கா 250 பில்லியன் டாலருக்கு (ஒரு பில்லியன் என்பது 100 கோடி டாலர்.) கூடுதல் வரி விதித்தது. சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது 110 பில்லியன் டாலர் கூடுதல் வரி விதித்து பதிலடி தந்தது.

ஆனாலும், அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் முடிவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். இரு தரப்பு வர்த்தகப் போரை நிறுத்தி வைக்கவும், ஜனவரி 1-ந்தேதி முதல் 90 நாட்களுக்கு கூடுதல் வரிகளை விதிப்பதில்லை என்றும் ஒப்புக்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் போடுவதற்கு, அமெரிக்கா மற்றும் சீன வர்த்தக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக வாஷிங்டனில் நேற்று முன்தினம் டிரம்ப் நிருபர்களிடம் பேசுகையில், “சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்பதில் நம்பிக்கையாக உள்ளேன். ஆனால், அமெரிக்காவுக்கு நன்மை அளிக்கும் என்றால் மட்டும்தான் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவேன்” என திட்டவட்டமாக கூறினார்.

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் ஏற்கனவே எச்சரித்து இருந்தது நினைவுகூரத்தக்கது.

-athirvu.in