போயிங் 737 பயணியர் விமானத்திற்கு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளில் தடை

போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இயக்குவதற்கு சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலிய விமான பயணியர் நிறுவனங்கள் தற்காலிக தடை விதித்துள்ளன.

போயிங் மேக்ஸ் 8 ரக பயணியர் விமானம் ஞாயிற்றுக்கிழமை விபத்திற்குள்ளாகி அதில் பயணம் செய்த 157 பேர் பலியானதை தொடர்ந்து இந்த முடிவு வந்துள்ளது.

5 மாதங்களுக்குள் இந்த ரக பயணியர் விமானம் விபத்திற்குள்ளாவது இது இரண்டாவது முறை.

உலகிலேயே 6வது மிக பெரிய, விறுவிறுப்பாக இயங்குகின்ற சிங்கப்பூரின் சான்கி விமான நிலையம் ஐரோப்பாவோடும், அமெரிக்காவோடும் ஆசியவை இணைக்கின்ற முக்கிய விமான முனையமாகும்.

இங்கிருந்து உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் இத்தகைய பெரிய விமானத்தை சில நிறுவனங்கள்தான் இயக்கி வருகின்றன.

போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் எதையும் எந்தவொரு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்களும் இயக்கவில்லை. சில்க்ஏர் மற்றும் ஃபீஜி ஏர்வேய்ஸ் என்ற இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள்தான் இவற்றை ஆஸ்திரேலியாவில் இருந்து இயக்கி வருகின்றன.

இந்த விமானத்திலுள்ள பாதுகாப்பு ஆபத்துக்களை மீளாய்வு செய்து,மேலதிக தகவல்களை இந்த நிறுவனம் பெறுவது வரை இந்த தற்காலிக தடை அமலில் இருக்கும் என்று ஆஸ்திரேலிய பயணியர் விமான பாதுகாப்பு நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் ஷான் கார்மோடி கூறியுள்ளார்.

இலங்கை
இலங்கை

இந்த விபத்தை தொடர்ந்து, உலகிலுள்ள பல விமான நிறுவனங்கள் மேக்ஸ் 8 ரக விமானத்தை ஏற்கெனவே இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளன.

தென் கொரியாவில் மேக்ஸ் 8 ரக விமானத்தை கொண்டிருக்கும் ஒரேயோரு விமான நிறுவனமான ஈஸ்டர் ஜெட் நிறுவனத்திடம், அதன் விமானங்களை புதன்க்கிழமை முதல் நிறுத்தி வைக்க அந்நாடு கேட்டுக்கொண்டுள்ளதாக ஏஃஎப்பி நியூஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, விழுந்து நொறுங்கிய எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நொறுங்கி விழந்த இடத்தில் இருந்து போயிங் 737 ரக விமானத்தின் கறுப்புப் பெட்டியும், விமானி அறையில் உள்ள குரல் பதிவு கருவியும் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

வரைபடம்

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மணி 8.44க்கு கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், எட்டு விமான ஊழியர்கள் உள்பட விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தினையடுத்து அங்கு பல விமானங்கள் தரையிரக்கப்பட்டன. அந்த விமானத்தில்கென்யா, எத்தியோப்பியா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்தனர்.

நடந்தது என்ன?

வரைபடம்

எத்தியோப்பிய விமானம் விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் விமான ஓட்டுநர் சில சிரமங்களை சந்தித்ததாக தெரிவித்ததையடுத்து மீண்டும் அடிஸ் அபாபா விமான நிலையத்துக்கே திரும்பும்படி அவரிடம் கூறப்பட்டிருந்த சூழலில் இந்த விபத்து ஏற்பட்டது என எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

“தற்போதைய சூழலில் எதுவும் சொல்ல முடியாது. விசாரணைக்கு காத்திருக்க வேண்டும்” என எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குநர் டெவோல்டே ஜெப்ரிமரியம் தெரிவித்துள்ளார். -BBC_Tamil