ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்வதற்காகத் தயாரிக்கப்பட்ட முக்கிய பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவுத் திட்டத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது.
பிரெக்ஸிட் திட்டத்தின்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இன்னும் 16 நாளில் பிரிட்டன் வெளியேற வேண்டும். அப்படி வெளியேறும்போது பிற ஐரோப்பிய நாடுகளுடன் அது கொள்ள வேண்டிய உறவு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் ஒரு ஒப்பம் செய்துகொள்ள திட்டமிடுகின்றன.
இதற்காகத் தயாரிக்கப்பட்ட முதல் வரைவு ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் கடந்த ஜனவரி மாதம் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இதையடுத்து வரைவு ஒப்பந்தம் புதிதாகத் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக இரண்டாவது முறையாக முன்வைக்கப்பட்டது. இதன் மீது செவ்வாய்க்கிழமை நடந்த வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் எதிராக வாக்களித்தனர்.
பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தாக்கல் செய்த இந்த ஒப்பந்த நகல், 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. ஒப்பந்தத்தை ஆதரிக்கும்படி பிரதமர் விடுத்த கடைசி நிமிட வேண்டுகோளையும் எம்.பி.க்கள் நிராகரித்தனர்.
இதையடுத்து, ஒப்பந்தம் ஏதும் இல்லாமலேயே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறலாமா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும். அதையும் நாடாளுமன்றம் ஏற்காவிட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை தாமதப்படுத்தலாமா என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரீசா மே தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தம் ஏதுமில்லாமல் வெளியேறலாமா என்பது குறித்து தம்முடைய, கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் விருப்பப்படி சுதந்திரமாக வாக்களிக்கலாம் என்றும் கூறியுள்ளார் தெரீசா மே.
இதன் பொருள், எம்.பி.க்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்கலாம். கட்சி நிர்வாகம் கூறுகிறபடி வாக்களிக்கவேண்டியதில்லை. முக்கியமான கொள்கை முடிவு ஒன்றில் இப்படி கூறப்படுவது அசாதாரணமானது.
“ஆகவே நாட்டை வழிநடத்துவதைப் போன்ற பாவனையைக் கூட அவர் (பிரதமர்) கைவிட்டுவிட்டார்” என்று விமர்சித்துள்ளது எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி. -BBC_Tamil