பள்ளிக்கட்டிடம் இடிந்து விபத்து- 18 பேர் பலி!

நைஜீரியாவில் பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 18 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 60 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் லாகோஸ் மாநிலத்தில் உள்ள இட்டா பாஜி நகரில் 4 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடத்தின், 4-வது தளத்தில் பள்ளிக்கூடம் இயங்கிவந்தது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். கட்டிடத்தின் மற்ற தளங்களில் மக்கள் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அன்று காலை சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென அந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

மாணவர்களின் அலறல் சத்தம் அந்த பகுதியையே அதிரவைத்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் என அனைவரும் தீவிர மீட்பு பணியில் இறங்கினர்.

இந்த கோர சம்பவத்தில் 12 மாணவர்கள், பள்ளியின் உரிமையாளர், ஒரு கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 18 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சுமார் 60 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக, தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மீட்புப்பணிகள் நேற்று முடிவடைந்த நிலையில், இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம் சேதமடைந்த கட்டிடமாக அடையாளம் காணப்பட்டு இடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருந்ததாக மாகாண கட்டிட கட்டுப்பாடு முகமை கூறியுள்ளது.

இச்சம்பவத்திற்கு நைஜீரிய அதிபர் முகமது புகாரி இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in