நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி – தீவிரவாத தாக்குதலா என விசாரணை

நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில், ஒரு டிராமில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். இதற்கு காரணமான துப்பாக்கிதாரியை போலீஸார் தேடி வருகின்றனர்.

மேலும் இதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது “தீவிரவாத தாக்குதல் போல தெரிகிறதாக” அதிகாரிகள் கூறியுள்ளனர்.

துருக்கி நாட்டை சேர்ந்த 37 வயது கோக்மென் டானிஸ் என்னும் நபரை போலிஸார் தேடு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் யாரும் அவரிடம் நெருங்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி காலை 10:45 மணிக்கு, 24 அக்டோபர்ப்ளேன் ஜங்ஷன் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு மூன்று ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

துருக்கி

துப்பாக்கிதாரி சம்பவ இடத்தில் இருந்து காரில் தப்பிச் சென்றதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அப்பகுதிக்கு மக்கள் வரவேண்டாம் என்றும் அப்பகுதியில் உள்ள பள்ளிகளை திறக்க வேண்டாம் என்றும் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நகரம் முழுவதும், டிராம் சேவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக யூட்ரெக்ட் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

நகரத்தின் மேற்கு பகுதியில் உள்ள டிராம் நிலையத்திற்கு அருகே உள்ள சதுக்கத்தில் அதிகாரிகள் குவிந்துள்ளனர். மேலும் அங்கு அவசர சேவைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.

நெதர்லாந்தின் தீவிரவாதத்துக்கு எதிரான ஒருங்கிணைப்பாளர், உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, நெருக்கடி நேர குழு ஒன்றை அமைத்துள்ளார். நகரம் முழுவதிலும் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து “மிகுந்த கவலைக் கொள்வதாக” தெரிவித்த அந்நாட்டு பிரதமர் மார்க் ருட்டே, இந்த வாரத்தில் நடைபெற இருந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளை ரத்து செய்தார்.

மேப்

காயமடைந்தவர்களுக்கு உதவ யூட்ரெக்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்தில் உள்ள அவசர சிகிச்சை அறைகளை திறந்து வைக்குமாறு பாதுகாப்பு சேவை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

யூட்ரெக்ட் பல்கலைக்கழகத்தின் அனைத்து கட்டடங்களும் மூடப்பட்டுள்ளன. யூட்ரெக்ட் சென்ட்ரல் நிலையத்திற்கு எந்த ரயிலும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் நகரத்தில் உளள மசூதிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

“ஒரு ஆள் துப்பாக்கியை எடுத்து கொடூரமாக சுடத் தொடங்கினார்” என சம்பவத்தை நேரில் பார்த்தவர் டச் நியூஸ் வலைதளத்திடம் தெரிவித்தார்.

காயடைந்த பெண் ஒருவரை கைகள் மற்றும் அவரது ஆடைகளில் ரத்தம் வழியப் பார்த்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த மேலும் ஒருவர் கூறினார்.

“அவரை என் காருக்கு அழைத்து வந்து உதவினேன். போலீஸ் வந்தோது அவர் மயக்கத்தில் இருந்தார் ” என அவர் குறிப்பிட்டார்.

எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறித்து இன்னும் தெரிய வரவில்லை.

துப்பாக்கிச்சூடு

-BBC_Tamil