இடாய் சூறாவளி: பேரழிவினால் மொசாம்பிக், ஜிம்பாப்வே கடும் பாதிப்பு

தெற்கு ஆப்ரிக்காவில் பல மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு காரணமான இடாய் சூறாவளி மிகப் பெரிய பேரழிவை உருவாக்கியுள்ளதாக ஐ.நா. (ஐக்கிய நாடுகள் சபை) அமைப்பு தெரிவித்துள்ளது.

தெற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள மொசாம்பிக், ஜிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய மூன்று நாடுகளும் பெரும் வெள்ளம் மற்றும் பேரழிவினால் கடந்த சில நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இடாய் சூறாவளியின் தாக்கம் குறித்து மொசாம்பிக்கின் அதிபர் பிலிப் நியூஸி “இது ஒரு பெரும் மனித பேரழிவு” என்று குறிப்பிட்டார்.

கடந்த வாரம் மொசாம்பிக்கை தாக்கிய இடாய் சூறாவளியினால் 1000 பேருக்கு மேல் மொசாம்பிக்கில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்நாட்டின் அதிபர் கூறியுள்ளார்.

பேரழிவை உண்டாக்கிய இடாய் சூறாவளி:1000 பேருக்கு மேல் உயிரிழப்பு?

வியாழக்கிழமையன்று மணிக்கு 177 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய இந்த சூறாவளி அந்நாட்டின் சோஃபாலா பிராந்தியத்தில் உள்ள துறைமுக நகரமான பேய்ராவில் கரையை கடந்தது.

இடாய் சூறாவளி ஏற்படுத்திய கடும் பாதிப்பில் நாடெங்கும் சிதறிய மரங்கள், உடைந்த மின்சார தூண்கள் மற்றும் மிதக்கும் நூற்றுக்கணக்கான உடல்கள் என பேரழிவு காட்சிகள் காணப்படுகின்றன.

உயிரிழந்தவர்களை தவிர ஏராளமான மக்கள் வெள்ளம் மற்றும் சூறாவளியினால் காயமடைந்துள்ளனர்.

தென்னாபிரிக்க பிராந்தியம் சந்தித்த மிக மோசமான இயற்கை பேரழிவு இடாய் சூறாவளி என்று ஐநா அமைப்பு இதனை வர்ணிக்கிறது.

சென்ற வாரம் கரையை கடந்த இடாய் சூறாவளியின் நேரடி பாதையில் உள்ள மொசாம்பிக்கில் 1.7 மில்லியன் மக்களும், மல்லாவி நாட்டில் கிட்டத்தட்ட 9 லட்சம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஜிம்பாப்வேயில் குறைந்தபட்சம் 20,000 வீடுகள் தென்பகுதி நகரமான சிப்பிங்கில் சேதமடைந்துள்ளன.

பேரழிவை உண்டாக்கிய இடாய் சூறாவளி:1000 பேருக்கு மேல் உயிரிழப்பு?

“இடாய் சூறாவளி தென் துருவத்தை பகுதிகளில் தாக்கிய மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாக மாறியுள்ளது,” என ஐ.நாவின் வானிலை மையத்தை சேர்ந்த கிளர் நல்லிஸ், பிபிசியிடம் தெரிவித்தார்.

சூறாவளி பாதிப்பால் பல குடும்பங்களில் பெற்றோர் இருவரில் ஒருவர் இறந்தோ, காணாமல் போய்விட்டதாலோ, ஏராளமான குழந்தைகள் பசியால் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. -BBC_Tamil