பழரசத்தை ஊசி மூலம் உடம்பில் செலுத்திய பெண் – நடந்தது என்ன?

பழங்கள் நல்லது என்பது மருத்துவர்கள் அடிக்கடி வலியுறுத்தும் ஒரு விஷயம்.

ஆனால் சீனாவில் ஒரு பெண் பழச்சாறை ஊசி வழியாக தனது உடலில் செலுத்திக்கொண்ட பின்னர் மரணத்தின் விளிம்பு வரை சென்றுள்ளார்.

51 வயதுக்கும் அப்பெண்மையின் கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் ஆகியவை பாதிப்புக்குளாக்கின. மேலும் அவசர சிகிச்சை பிரிவில் ஐந்து நாள்கள் உயிருக்காக போராடியுள்ளார்.

சுமார் 20 வகையான பழங்களை எடுத்துக்கொண்டு பழச்சாறாக்கி நரம்பில் ஊசி வழியாக செலுத்திக் கொண்டார் என சியாங்கன் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு ஊழியர் பிபிசியிடம் கூறினார்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் சீனாவில் மக்களுக்கு ஏன் அடிப்படை மருத்துவ அறிவு அவசியம் தேவை என்ற விவாதம் அந்நாட்டின் சமூக வலைதள பயனர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அப்பெண் பழச்சாறை தனது உடலில் செலுத்திக்கொண்டதும் அவரது உடலில் அரிப்பு ஏற்பட்டது பின்னர் உடலின் வெப்பநிலை கடுமையாக அதிகரித்தது.

கடந்த 22ம் தேதி அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். மரணத்தின் விளிம்பில் இருந்த அவர் உயிர் பிழைத்தபின்னர் ஒருவழியாக பொது பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சீன சமூக வலைதளமான வெய்போவில் இந்த விவரம் பெரும் கவனம் ஈர்த்தது. பதினோறாயிரத்துக்கும் அதிகமான பயனர்கள் #OldWomanPutsJuiceIntoVeins எனும் ஹேஷ்டேக்கை பயன்படுத்தினர்.

பொது மக்களின் மருத்துவ அறிவு இன்னமும் குறைவாக இருப்பதை இந்நிகழ்வு காட்டுகிறது என ஒருவர் பதிவிட்டுள்ளார். -BBC_Tamil