ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு நடைபெறும் தாய்லாந்தின் பொதுத் தேர்தல்

2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு தாய்லாந்தில் முதன்முறையாக பொதுத் தேர்தல் நடைபெற்றது.

தாய்லாந்தில் பல வருடங்களாக அரசியல் ஸ்திரமற்ற தன்மை இருந்து வந்தது. அங்கு ராணுவ ஆதரவாளர்கள் மற்றும் பதவியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் பிரதமர் தக்சின் ஷின்னவாட்ரா ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு மத்தியில் மோதல் போக்கு நிலவி வந்தது.

ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாக ராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தது.

ராணுவத்தால் அறிமுகப்படுத்தப்படும் புதிய அரசியலமைப்பில், ராணுவம் தனது தாக்கத்தை கொண்டிருக்கும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

தாய்லாந்து

50 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் பங்கேற்றனர். வாக்கெடுப்பின்போது கொந்தளிப்புகள் ஏற்பட 80 சதவிகித வாய்ப்புகள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

18-26 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் ஏழு மில்லியனுக்கும் அதிகமானோர் இருப்பதால் அனைத்து கட்சியினரும் அவர்கள் மீது கவனம் செலுத்தினர்.

தேர்தலின் போது அமைதியை காக்க வேண்டும் என தாய்லாந்து அரசர் மஹா வஜ்ரலங்கோன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

சனிக்கிழமை மாலை தேசிய தொலைக்காட்சியில் வெளியான அந்த அறிக்கையில் நல்ல மனிதர்களுக்கு ஆதரவளியுங்கள் என அவர் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் முக்கியமாக ராணுவத்துக்கு ஆதரவு வழங்கும் அணிகள் மற்றும் தக்சினுடன் கூட்டணி வைத்துள்ளவர்களும் மோதுகின்றனர்.

2006ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் தக்சின் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். மேலும் அதிகார துஷ்பிரயோகம் குற்றத்திலிருந்து தப்பிக்க அவர் நாட்டை விட்டு வெளியே வாழ்ந்து வந்தார். இருப்பினும் அவருக்கு கிராமப்புற பகுதிகளில் பெரும் ஆதரவு இருந்தது.

தாய்லாந்து

இன்று நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் நாடாளுமன்றத்தின் கீழவையின் 500 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர்.

ஆனால் அரசியல் சாசனம்படி 250 செனேட் உறுப்பினர்களை ராணுவம் அமர்த்தியுள்ளது. இரண்டு அவைகளும் இணைந்து பிரதமரை தேர்ந்தெடுக்கும்.

ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஜென் பிரயூத் கீழவைகளின் 126 வாக்குகளை பெற்றால் வெற்றி பெற முடியும். அரசாங்கம் மற்றும் கூட்டணி கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுக்க முடியும். -BBC_Tamil