இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்த இரானுக்கு சொந்தமான படகொன்றுடன், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த போதைப்பொருள் இன்று காலை கைப்பற்றப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.
கைப்பற்றப்பட்ட படகிலிருந்து சுமார் 107 கிலோகிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
போலீஸ் விசேட அதிரடிப்படை, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் கடற்படை ஆகியவை இணைந்து இந்த சுற்றி வளைப்பை முன்னெடுத்தனர்.
இந்த சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்படுகின்ற தருணத்தில், படகிலிருந்த ஒரு தொகை ஹெரோயினை படகில் பயணித்தவர்கள் கடலில் வீசியுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் போர்வையில் இந்த போதைப்பொருள் கடத்தல் இடம்பெற்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட படகிலிருந்து கையடக்கத் தொலைப்பேசிகள் மற்றும் செயற்கைக்கோள் தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானிலிருந்து இந்த ஹெரோயின் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
எனினும், இந்த போதைப்பொருள் வர்த்தகத்துடன் பாகிஸ்தான் பிரஜைகளும் தொடர்புப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். -BBC_Tamil