பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமெரிக்கா-இந்தியா வலியுறுத்தல்!

தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா- இந்தியா பயங்கரவாத ஒழிப்பு குழுவின் கூட்டம் வாஷிங்டனில் நேற்று நடை பெற்றது.

அமெரிக்க அரசின் பயங்கரவாத ஒழிப்பு தூதரக ஒருங்கிணைப்பாளர் நாதன் சேல்ஸ், இந்திய வெளியுறவு துறை அமைச்சக இணை செயலாளர் மகாவீர் சிங்வி ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்துக்கு பிறகு இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டன. அதில், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

சர்வதேச அளவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு பண உதவி வழங்குவதை தடுத்தல், பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை தடுத்தல், இண்டர்நெட் போன்ற ஊடகங்கள் பயன்படுத்துவதை தடுத்தல், வெளிநாட்டு பயங்கரவாத குழுக்கள் நுழைவதை கட்டுப்படுத்துதல் போன்றவைகளில் பெரும் சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

அதில், இந்தியாவின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. பாகிஸ்தான் தனது மண்ணில் செயல்படும் தீவிரவாதிகளின் மீது அர்த்தமுள்ள மிக கடுமையான நட வடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்களுக்கு அமெரிக்கா என்றும் ஆதரவு அளிக்கும் என அதிகாரி நாதன் சேல்ஸ் தெரிவித்தார்.

-athirvu.in