லிபியாவின் மேற்கு கடற்பகுதியில் ரப்பர் படகில் ஆபத்தான வகையில் பயணம் மேற்கொண்ட 117 சட்டவிரோத அகதிகளை கடலோர பாதுகாப்பு படையினர் மீட்டனர்.
லிபியாவில் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பதவிவெறி பிடித்த போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்து கொள்ள லிபியாவில் வறுமை நிலையில் வாடும் மக்களில் பலர் புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.
இதேபோல் வன்முறை, உள்நாட்டுப் போர், வறுமை உள்ளிட்ட காரணங்களால் மற்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் அகதிகள் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு லிபியா ஒரு முக்கிய போக்குவரத்து வழியாக உள்ளது. லிபியாவில் இருந்து அவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு, சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பல் மூலம் படகுகளில் செல்கின்றனர். இவ்வாறு செல்லும்போது பல சமயம் விபத்தில் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால் லிபிய கடற்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், லிபியாவின் அல் கோம்ஸ் கடற்பகுதியில் நேற்று ஏராளமான அகதிகள் ஒரு ரப்பர் படகில் சென்றுகொண்டிருந்தனர். அவர்களின் படகு கடலில் தள்ளாடியதைக் கவனித்த லிபிய கடலோர காவல் படையினர், உடனடியாக அங்கு சென்று அனைவரையும் மீட்டனர். விசாரணையில் அவர்கள் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
மீட்கப்பட்ட 84 ஆண்கள், 15 பெண்கள் மற்றும் 18 குழந்தைகள் என 117 பேருக்கும் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட்டு, தலைநகர் திரிபோலியில் உள்ள அகதிகள் மையத்திற்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளனர்.
-athirvu.in