வெனிசுலா விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்துங்கள் என்று அமெரிக்காவுக்கு ரஷியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் கெய்டோ போட்டி அரசாங்கம் நடத்துகிறார். தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துள்ளார். அவருக்கு அமெரிக்கா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.
அதேநேரத்தில் அதிபர் மதுரோவுக்கு ரஷியா மற்றும் சீனாவும் ஆதரவு அளித்துள்ளன. இதற்கிடையே ரஷியாவின் 2 ராணுவ விமானங்கள் கராகஸ் விமானநிலையத்துக்கு வெளியே ராணுவ வீரர்கள் மற்றும் ஆயுத தள வாடங்களுடன் ஒருவாரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உடனே ரஷிய படைகள் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார். அதற்கு ரஷியா-வெனிசுலா இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் உள்ளது.
வெனிசுலாவுக்கு ரஷியா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது ரஷியா ‘எஸ்-300’ என்ற ஏவுகணையை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதனால் இங்கு விமான ராணுவங்களும், வீரர்களும் முகாமிட்டுள்ளதாக தெரிவித்தது.
இந்தநிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்பால் ரஷியாவுக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், வெனிசுலாவில் இருந்து வெளிநாட்டு படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷியா வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் மரியா ஷகாரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில் வெனிசுலாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும், மிரட்டுவதையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். பொருளாதார பிரச்சினையை ஏற்படுத்தி உள்நாட்டு போர் உருவாக்குவதையும் நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
-athirvu.in