கஷோக்கியின் வாரிசுகளுக்கு சொத்துக்களை வாரி வழங்கும் சவுதி !

துருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கஷோக்கியின் வாரிசுகளுக்கு சவுதி அரசாங்கம் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை வழங்கியுள்ளது.

அந்தவகையில், கஷோக்கிக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என 4 வாரிசுகள் உள்ளனர். அவர்களுக்கு சவுதி அரேபிய அரசால் நீண்டகால அடிப்படையில் சொத்துகள் மற்றும் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வொஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “சவுதியின் ஜெட்டா நகரில் அமைந்துள்ள வீடுகள் கஷோக்கியின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கஷோக்கியின் மூத்த மகனான சலா, சவுதியில் தொடர்ந்து வசிக்க திட்டமிட்டுள்ளார். மற்றவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அவர்கள் இந்த வீடுகளை விற்கக் கூடும்” என செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சொத்துகள் தவிர்த்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் கோடிக்கணக்கான மதிப்புள்ள தொகையும் வழங்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

ஜமால் கஷோக்கி கடந்த ஒக்டோபர் 2ஆம் திகதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்திற்கு சென்றபொழுது கொல்லப்பட்டார். இதற்கு சவுதி அரேபிய இளவரசர் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சவுதி அரேபியா மறுத்து வந்தது.

கஷோக்கி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றஞ்சாட்டினார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த பின்னர் சவுதி அரேபிய அரசு ஒப்புக்கொண்டது. இச்சம்பவம் சவுதி அரேபியாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டது மிகப்பெரிய தவறுதான். அதே நேரம் இதில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என சவுதி அரேபியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே ஜமால் கஷோக்கியின் வாரிசுகளுக்கு சவுதி அரவு சொத்துக்களை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

-eelamnews.co.uk