கடந்த மாதம் தரையில் மோதி விபத்திற்குள்ளான எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம், தரையில் மோதுவதற்குள் பல முறை கர்ணம் அடித்து விழுந்துள்ளது என்று முதல் கட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
மோதுவதற்கு முன்னர், போயிங் நிறுவனம் வழங்கிய செயல்முறைகளை விமானிகள் மீண்டும் மீண்டும் பின்பற்றியுள்ளதாக இந்த பேரிடரின் முதலாவது அதிகாரபூர்வ அறிக்கை குறிப்பிடுகிறது.
விமானிகள் முயற்சிகள் எடுத்தபோதும், விமானத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் டாக்மாவிச் மோகஸ் தெரிவித்துள்ளார்.
இடி302 விமானம் அடிஸ் அபாபாவில் இருந்து மேலேழுந்து பறந்த சற்று நேரத்தில் கீழே விழுந்து மோதியதில் அதில் பயணம் செய்த 157 பேரும் இறந்தனர்.
போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் ஐந்து மாதத்தில் சந்தித்த இரண்டாவது விபத்து இது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ‘லயன் ஏர்’ விமானம் ஜேடி 610 இந்தோனீசியாவுக்கு அருகில் கடலில் விழுந்து, அதில் பயணித்த 189 பேரும் இறந்துயினர்.
அடிஸ் அபாபாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “விமானத் தயாரிப்பு நிறுவனத்தால் வழங்கப்பட்ட அனைத்து செயல்முறைகளையும் விமான ஊழியர் குழு நிறைவேற்றியது. ஆனாலும், அவர்களால் விமானத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை” என்று டாக்மாவிச் மோகஸ் தெரிவித்தார்.
எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமான விபத்துக்கு பின்னர், 737 மேக்ஸ் ரக விமானங்கள் அனைத்து இயக்கப்படாமல் தரையிறக்கப்பட்டன. 300 விமானங்களின் பயணங்கள் இதனால் பாதிக்கப்பட்டன.
விமானம் மோதியதற்கு காரணம் என்ன?
இந்த விபத்திற்கான காணரம் எதையும் முதல் கட்ட அறிக்கை தெரிவிக்கவில்லை. இந்த விமானப் பயணத்தின் விவரமான ஆய்வையும் இது வழங்கவில்லை.
போயிங் விமான கட்டுப்பாட்டு அமைப்பை மீளாய்வு செய்து பரிந்துரைத்துள்ள இந்த அறிக்கை, 737 மேக்ஸ் ரக விமானங்களை மீண்டும் இயங்க அனுமதிப்பதற்கு முன்னர், விமானத்துறை அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது,
எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் தலைமை செயலதிகாரி டிவேல்டி கெபிரமரியம் வெளியிட்ட அறிக்கையில், உயர் நிலை தொழில்முறை திறனோடு செயல்பட்டுள்ள விமானிகளை பார்த்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.
“இந்த விமானம் தலைகீழாக விழுந்து மோதுவதில் இருந்து மீட்டெடுக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது” என்று அவர் குறிப்பிட்டார்.
- போயிங் 737 பயணியர் விமானத்திற்கு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளில் தடை
- நொறுங்கி விழுந்த எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு
- போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இந்தியாவில் பறக்க தற்காலிக தடை
எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் தலைமை செயலதிகாரி டிவேல்டி கெபிரமரியம் வெளியிட்ட அறிக்கையில், உயர் நிலை தொழில்முறை திறனோடு செயல்பட்டுள்ள விமானிகளை பார்த்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.
“இந்த விமானம் தலைகீழாக விழுந்து மோதுவதில் இருந்து மீட்டெடுக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது” என்று அவர் குறிப்பிட்டார். -BBC_Tamil