நாட்டுக்குத் திரும்பிய ஐந்து மாதங்களில், தனது மாலைதீவு ஜனநாயகக் கட்சிக்கு நேற்று முன்தின நாடாளுமன்றத் தேர்தல்களில் பாரிய வெற்றியொன்றைப் பெற்றுக் கொடுத்த மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட், பாரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும், அரசாங்க மோசடியை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாகவும் நேற்று (07) தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், 87 நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றம் கொண்டுள்ளநிலையில், மாலைதீவு ஜனநாயகக் கட்சி மூன்றிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதை நோக்கி பயணிக்கின்றது.
இந்நிலையில், அரசாங்கத்தையும், நீதித்துறையையும் பாதித்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனின் ஆட்சி, அரசியல் நெருக்கடிகள், மோசடிகள் என்பனவற்றிலிருந்து மாலைதீவுகள் விடுதலை பெறுகின்ற நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் பயன்படுத்தி மாலைதீவுகளில் புதிய அத்தியாய நிலைத்த தன்மை, ஜனநாயகத் தன்மையை ஏற்படுத்தப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் உறுதியளித்துள்ளார்.
அந்தவகையில், முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் மாலைதீவு ஜனநாயகக் கட்சி பெற்ற குறித்த வெற்றியானது, முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் பரம வைரியான, கடந்தாண்டு செப்டெம்பர் ஜனாதிபதித் தேர்தலில் அதிர்ச்சித் தோல்வியைத் தளுவிய அப்துல்லா யமீனுக்கான மேலுமொரு அடியாகக் காணப்படுகின்றது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீன் போட்டியிட்டிருக்காதபோதும், அவரது மாலைதீவு முன்னேற்றக் கட்சி நான்கு ஆசனங்களையே நாடாளுமன்றத்தில் பெறும் என எதிர்வுகூறப்படுகின்றது.
அந்தவகையில், ஆரம்பகட்ட முடிவுகளின்படி மாலைதீவு ஜனநாயகக் கட்சியானது ஏறத்தாழ 60 ஆசங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், 68 வரையான ஆசனங்களை மாலைதீவு ஜனநாயகக் கட்சி வெல்லும் என சில உள்ளூர் ஊடகங்கள் எதிர்வுகூறியுள்ளன.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனுக்கெதிரான ஏழு ஆசனங்களை வென்ற இன்னொரு கட்சியும், சில சுயாதீன வேட்பாளர்களும் மாலைதீவு ஜனநாயகக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பார்கள் என அரசியல் தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.
-tamilmirror.lk