இலங்கை குண்டு வெடிப்பு: சீனா, போர்ச்சுக்கல், நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் 27 வெளிநாட்டினர் பலி

கொழும்பு: இலங்கையில் என்று அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில், வெளிநாட்டவர்கள் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஈஸ்டர் திருநாளான இன்று, கொழும்பு உட்பட இலங்கையின் பல்வேறு பகுதிகளில், தேவாலயங்கள் மற்றும் வெளிநாட்டினர் அதிகம் தங்கியிருக்கக் கூடிய நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.

பெரும்பாலான குண்டுவெடிப்புகள் தற்கொலைப் படையினரால் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கிறிஸ்தவர்கள், வெளிநாட்டவர்கள் இலக்கு

மாலை 6 மணி நிலவரப்படி, மொத்தம் 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அதில் 207 பேர் கொல்லப்பட்டனர். 450 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கிறிஸ்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் ஆகிய இரண்டு தரப்பையும் இலக்கு கொண்டு தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர், என்பது தாக்குதல் நடைபெற்றுள்ள இடங்களை கணக்கில் வைத்து பார்க்கும் போது தெரிகிறது.

தற்கொலைப் படை தாக்குதல்

ஒரே இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப் படையினர்தான், பெரும்பாலான தாக்குதல்களில் ஈடுபட்டு உள்ளனர் என்று, இலங்கையின் பாதுகாப்பு துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சக புள்ளிவிவரப்படி, குறைந்தது 27 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மூன்று போலீசாரும் உயிரிழந்துள்ளனர்.

27 பேர் படுகொலை

கொல்லப்பட்ட வெளிநாட்டவர்களில், 5 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. எஞ்சிய 22 பேரும், அவர்களின் தோல் நிறத்தை வைத்து வெளிநாட்டினர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களை பற்றிய மேலதிக தகவல்கள் இன்னும், வெளியாகவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

டச்சு நாட்டுக்காரர்

இதனிடையே டச்சு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டெப் பிளாக், வெளியிட்டுள்ள, ட்வீட்டொன்றில், ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடைபெற்ற கொடுமையான தாக்குதலில் டச்சு நாட்டை சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை மக்களுக்கு நெதர்லாந்து, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஸ்டெப் பிளாக்.

சீனர் கொலை

இதனிடையே, உயிரிழந்த வெளிநாட்டினர்கள் ஒருவர் சீனாவைச் சேர்ந்தவர் என்று, அந்த நாட்டின், ‘பீப்பிள்ஸ் டெய்லி’ என்ற, ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. போலவே, போர்ச்சுக்கல் வெளிநாட்டு அமைச்சகம், தங்கள் நாட்டை சேர்ந்த ஒருவர் இலங்கையில் கொல்லப்பட்டிருப்பதாக உறுதி செய்துள்ளது.

tamil.oneindia.com