உக்ரைன் அதிபர் தேர்தலில் அந்நாட்டின் பிரபல நகைச்சுவை நடிகர் வோலோடிமீர் ஜெல்லன்ஸ்கி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
அரசியலுக்கு புதியவரான ஜெல்லன்ஸ்கி, மூன்று வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 70 சதவீதத்திற்கும் அதிகமான ஆதரவு வாக்குகளை பெற்றிருந்தார்.
41 வயதான ஜெல்லன்ஸ்கியிடம் தோல்வியடைந்ததை ஒப்புக்கொள்வதாக அந்நாட்டின் தற்போதைய அதிபர் பெட்ரோ போரோஷென்கோ கூறியுள்ளார்.
இந்த முடிவுகள் பெட்ரோவுக்கு மட்டுமின்றி அவர் முன்னிறுத்திய திட்டங்களுக்கு கிடைத்த பேரிடியாக பார்க்கப்படுகிறது.
“நான் உங்களை ஒருபோதும் விட்டுவிடமாட்டேன்” என்று ஞாயிற்றுக்கிழமையன்று வெளிவந்த வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு பிறகு நடந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஜெல்லன்ஸ்கி மக்களிடையே கூறினார்.
“நான் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதிபராகவில்லை. ஆனால், உக்ரைனின் குடிமகனாக அனைத்து நாடுகளிடமும் – ‘எங்களை பாருங்கள், இங்கு எல்லாமுமே சாத்தியமானது’ என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.
கருத்துக் கணிப்புகள் சரியாக இருக்கும்பட்சத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உக்ரைனின் அதிபராக ஜெல்லன்ஸ்கி இருப்பார்.
உக்ரைனின் தொலைக்காட்சி நகைச்சுவை தொடர் ஒன்றில் நடித்த ஜெல்லன்ஸ்கி, திடீரென அந்நாட்டின் அதிபராவதை போன்ற காட்சிகள் இருந்தன. அது தற்போது உண்மையாகியுள்ளது.
உக்ரைனை பொறுத்தவரை பாதுகாப்பு, வெளிநாட்டு கொள்கை, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் அந்நாட்டின் அதிபருக்கே அதிகாரம் உள்ளது. -BBC_Tamil