அமைதியான பொதுக் கூட்ட மசோதா பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தோற்றத்தை களங்கப்படுத்தியுள்ளதாக பல முக்கியமான பிஎன் பிரமுகர்கள் இடம் பெற்றுள்ள அமானா என்கிற நெருக்குதல் அமைப்பு கூறுகிறது.
“உருமாற்றத்துக்கான பிரதமர் என்னும் நஜிப்பின் தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ள இன்னொரு தவறைக் காணும் போது வருத்தமாக இருக்கிறது,” என அமானா உதவித் தலைவர் வான் சைபுல் வான் ஜேன் தெரிவித்துள்ளார்.
நஜிப், வழக்குரைஞர் மன்றத்துடன் ஆக்கப்பூர்வமான முறையில் ஆலோசனை நடத்தி, அது வழங்கிய மாற்று மசோதாவை பரிசீலித்திருக்க வேண்டும் என்றார் அவர்.
மக்களவையில் நேற்று அந்த மசோதா மீது நிகழ்ந்த விவாதத்தில் தனது மூன்று எம்பி-க்கள் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் அவையிலிருந்து வெளியேறிய பக்காத்தான் ராக்யாட்டை வான் சைபுல் கடுமையாகக் குறை கூறினார்.
“அவர்கள் அவையில் இருந்து வாக்களிப்பில் பங்கு கொண்டிருக்க வேண்டும். வெளிநடப்புச் செய்ததின் மூலம் அவர்கள் தேவையில்லாமல் உண்மையான பிரச்னையிலிருந்து திசை மாறச் செய்து விட்டனர்.”
நான்கு மணி நேரத்துக்குள் ஆறு எம்பி-க்கள் விவாதத்தில் பேசிய பின்னர் அந்த மசோதா நேற்று மக்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதனிடையே அரசமைப்பு உரிமைகள் சம்பந்தப்பட்டுள்ளதால் அந்த மசோதாவை அவசரம் அவசரமாக நிறைவேற்றுவதை தடுக்குமாறு அரசாங்கத்தையும் மேலவையையும் வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று வழக்குரைஞர் மன்றம் சமர்பித்த ஆட்சேபக் குறிப்பு செவிமடுக்கப்படாமல் போனது குறித்து ஏமாற்றம் தெரிவித்த அவர். “மலேசியா தினத்தன்று தாம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு பிரதமரை வற்புறுத்துவதற்கான போராட்டத்தை மலேசிய வழக்குரைஞர் மன்றம் கைவிடாது,” என்று உறுதி அளித்தார்.
“நஜிப் தமது அவாக்களையும் மக்களுடைய அவாக்களையும் பகிர்ந்து கொள்ளாத மற்றவர்களுடைய செல்வாக்கிற்கு இரையாகி விடக் கூடாது என நாங்கள் அவரைக் கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் தொடர்ந்து பேசுவோம். நாங்கள் தொடர்ந்து விவாதம் நடத்துவோம். நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடருவோம்.”
அந்த மசோதா அரசமைப்புக்கு ஏற்ப அமைந்துள்ளதா என்பது மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் சாத்தியமும் இருப்பதாக லிம் சொன்னார்.
அரசாங்கத்துக்கு எச்சரிக்கை
அடுத்த புதன்கிழமை கூடும் மேலவையில் தாக்கல் செய்யப்படுவதற்காக அந்த மசோதா காத்திருக்கும் வேளையில் இன்னும் பல ஆட்சேபங்களை நஜிப் எதிர்பார்க்கலாம் என அரசியல் ஆய்வாளாரான வோங் சின் ஹுவாட் கூறினார்.
1981ல் பிரதமராக இருந்த ஹுசேன் ஒனும், அவருக்கு பின்னர் வந்த டாக்டர் மகாதீர் முகமட்டும் சங்கச் சட்டத்தைத் திருத்துவதற்கு முயற்சி செய்த போது தெரிவிக்கப்பட்ட ஆட்சேபத்தை வோங் முன்னுதாரணமாக காட்டினார்.
பல அமைப்புக்கள் அங்கம் பெற்றிருந்த கூட்டணி ஒன்று தீவிரமாக முயற்சி செய்த பின்னர் அந்தத் திருத்த மசோதாவின் குறிப்பிட்ட சில விதிமுறைகள் கைவிடப்பட்டன.
“30 ஆண்டுகளுக்கு முன்னர் மகாதீர் இருந்ததைக் காட்டிலும் தாம் வலிமையாக இருக்கின்றோமா என நஜிப் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்னர் நமது பெற்றோர்கள் இருந்ததைக் காட்டிலும் நாம் பலவீனமாக இருக்கிறோமா என மலேசியர்களாகிய நாம் நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டும்.”
“நான் அப்படி நினைக்கவில்லை. அதனால் நாம் தொடர்ந்து போராடப் போகிறோம்.”
“சின்னஞ்சிறு ஒடைகளாக உள்ள ஆத்திரம் ஒன்று சேர்ந்து அரசாங்கத்தை அடித்துச் செல்லக் கூடிய ஒரு நதியாக மாறும் நேரம் வெகு தொலைவில் இல்லை.”