பிலிப்பைன்ஸின் முக்கிய தீவான லூசானில் நிகழ்ந்த பலத்த நிலநடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆகியுள்ளது.
6.1 அளவு இருந்த நிலநடுக்கம் நிகழ்ந்த 24 மணிநேரத்திற்குள் 6.4 அளவுள்ள இரண்டாவது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மத்திய விசாயாஸ் பிரதேசத்தின் தெற்கு பகுதியை தாக்கியுள்ளது.
6.1 அளவிலான முதல் நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி திங்கள்கிழமை மாலை 5:11 மணிக்கு நிகழ்ந்தது என பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்க நிறுவனம் தகவல் வெளியிட்டது.
விமான நிலையம் ஒன்று இதில் கடுமையாக சேதமடைந்துள்ளது. இரண்டு கட்டடங்கள் இடிந்துள்ளன.
டிக்லோபன் நகரம், லேடெய், சாமாரலுள்ள கேட்பலூகன் ஆகிய பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தலைநகர் மணிலாவிலுள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
செவ்வாய்க்கிழமை பதிவிடப்பட்ட சமூக ஊடகப் பதிவுகள் கட்டடங்கள் முன்னும் பின்னும் அசைவதையும், சாலைகளில் பெரிய விரிசல்கள் விழுந்திருப்பதையும் காட்டுகின்றன. அங்கு உயிரிழப்புகள் பற்றி தெளிவாக தெரியவில்லை என்று அவர் கூறுகிறார்.
டிக்லோபன் நகரமும், அதை சுற்றிய பிரதேசமும் 2013ம் ஆண்டு வீசிய ஹய்யான் சூறாவளியால் பெரும் அழிவுக்குள்ளாகின.
முதலில் நிகழ்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, தலைநகர் மணிலாவுக்கு வடமேற்கிலுள்ள பாம்பாங்கா மாகாணத்தில் இடிந்த கட்டட இடிபாடுகளுக்கு அடியில் மக்கள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்,
இந்த மாகாணம்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 20 பேர் காயமடைந்துள்ளதாக அதன் ஆளுநர் லிலியா பினிடா, ரயாட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
நிலநடுக்கத்திற்கு பின்னர், லுசான் நகரில் பெண்ணொருவரும், அவரது பேரக்குழந்தையும் இறந்துள்ளது தெரிய வந்துந்துள்ள நிலையில், கடை ஒன்றிலிருந்து 3 சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக ஏபிஎஸ்-சிபிஎன் தொலைக்காட்சியிடம் பினிடா கூறியுள்ளார்,
இதுவரை 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
- இலங்கை குண்டுவெடிப்பை கொண்டாடிய ஐஎஸ் ஆதரவாளர்கள் – பின்னணி?
- ஈஸ்டர் பண்டிகையின் போது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள்
மணிலாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் வர்த்தக மாவட்டத்தில் வானளாவிய கட்டடங்கள் அசைந்துள்ளன.
தலைநகர் மணிலாவில் இருந்து ஒரு மணிநேர பயணம் மேற்கெண்டால் சென்றடைகின்ற தொலைவில் அமைந்துள்ள கிளார்க் சர்வதேச விமான நிலையம் கடும் சேதமடைந்துள்ளதாகவும், குறைந்தது ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. -BBC_Tamil