வைரலாகும் கொரில்லா செல்ஃபியும், கொல்லப்படும் வன அதிகாரிகளும்

மனிதர்கள் மட்டும் அல்ல கொரில்லாக்களும் செல்ஃபி புகைப்படங்களுக்கு பழகிவிட்டன.

இரண்டு கொரிலாக்கள் செல்ஃபி புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

இந்த இரண்டு கொரில்லாக்களும் சிறு வயதில் வேட்டைக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டவை.

மேலுள்ள இந்த கொரில்லாக்களின் புகைப்படமானது, காங்கோவில் உள்ள விருங்கா தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டது. இந்த கொரில்லாக்களின் பெற்றோர்கள் வேட்டையாடிகளால் கொல்லப்பட்டப் பின், இவை இந்த தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்டன.

பாதுகாவலர்கள் போல பாவனை

இந்த கொரிலாக்கள் அதன் பாதுகாவலர்கள் போல பாவனை செய்ய தொடங்கிவிட்டன என இந்த பூங்காவின் துணை இயக்குநர் பிபிசியிடம் கூறினார்.

இந்த ரேஞ்சர்தான் தமது பெற்றோர் என இந்த கொரிலாக்கள் நம்ப தொடங்கிவிட்டன என்கிறார் அவர்.

இந்த இரு கொரிலாக்களின் தாய்களும் 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொல்லப்பட்டன. அந்த சமயத்தில் இந்த கொரிலாக்களின் வயது 2 மற்றும் 4 என்கிறார் பூங்காவின் துணை இயக்குநர் இன்னசெண்ட்.

மேலும் அவர், “இது இயல்பான நிகழ்வு கிடையாது. எனக்கு இதை பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எப்படி ஒரு கொரில்லா மனிதன் போல நிற்க முடியும் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்,” என்றார்.

கொல்லப்படும் அதிகாரிகள்

1996ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 130 ரேஞ்சர்கள் இந்த தேசிய பூங்காவில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

காங்கோ

கடந்தாண்டு ஏப்ரல் மாதம், ஜனநாயக காங்கோ குடியரசில் உள்ள விருங்கா தேசிய பூங்காவில் ஐந்து வனத்துறை அதிகாரிகளும் அவர்களது ஓட்டுநர்களும் அங்கு பதுங்கி இருக்கும் சில கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த வனத்தில்தான் அழிந்து வரும் மலை கொரில்லாக்கள் வசிக்கின்றன. சட்டத்துக்கு புறம்பாக இங்கு இயங்கி வரும் ஜனநாயக குடியரசு காங்கோ கிளர்ச்சி குழுவினர், வேட்டையிலும் ஈடுபடுகின்றனர்.

தென் ஆஃப்ரிக்காவில் கடந்த ஏழு ஆண்டுகளில் 2500க்கும் அதிகமான காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டிருக்கின்றன.

காங்கோவில் ஆயுத குழுக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

பல ஆயுத குழுக்கள் இந்த பூங்காவில் இயங்குகின்றன. பலர் வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். -BBC_Tamil