தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலும், குவாசூலூ-நட்டால் மாகாண பகுதிகளிலும் வெள்ளப்பெருக்காலும், நிலச்சரிவுகளாலும் 51 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இந்த பிரதேசத்திற்க்கு அதிபர் சிரில் ராமபோசா விமானம் மூலம் சென்றுள்ளார்.
கடந்த சில நாட்களில் பெய்த கனமழையால், தென்னாப்பிரிக்காவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடற்கரை பகுதிகளில் மேலதிக வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்றும், பலத்த காற்று வீசலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவிக்கப்பட்ட கடும் வானிலை எச்சரிக்கை நிலை இன்னும் தொடர்ந்து வருகிறது.
சில சாலைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருப்பதையும், நிலச்சரிவுகளால் கட்டடங்கள் பாதிப்புள்ளாகி இருப்பதையும் இந்த பகுதியின் படங்கள் காட்டுகின்றன.
அதிகாரிகள் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு வருவதாக இந்த மாகாண அமைச்சரான நோமுசா டுபி-நகுப், எஸ்ஏஃஎப்எம் வானொலியில் தெரிவித்ததாக ஏஃஎப்பி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
நீண்ட காலமாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட வேண்டியிருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- வைரலாகும் கொரில்லா செல்ஃபியும், கொல்லப்படும் வன அதிகாரிகளும்
- 27 ஆண்டுகள் கோமாவில் இருந்த தாயை மீட்ட மகன்
“உயிரிழப்புகள், காயங்கள் மற்றம் உடைமைகளை இழந்து நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், சமூகங்களுக்கும் இரங்கல் தெரிவிக்கிறோம்” என்று அறிக்கை ஒன்றில் அதிபர் ராமபோசா தெரிவித்தார்.
“எல்லாரும் ஒன்றாக பாதிக்கப்பட்ட சமூகங்களை சென்றடைய இந்த நிலைமை நம்மை அழைக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
டஜன் கணக்கான மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இடிந்த கட்டடங்களுக்கு கீழ் சிக்கி யாராவது உயிரோடு இருக்கிறார்களா என்று தேடுதல் மற்றும் மீட்புதவி குழுக்கள் தேடி வருகின்றனர்.
-BBC_Tamil