இரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான அமெரிக்கத் தடை விலக்குக்கு முடிவு – இந்தியாவுக்கு ஏற்படும் விளைவு என்ன?

இரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான தடைக்கு விலக்கு அளிப்பதை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு

சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு மே மாதத்தில் முடிகிறது என்றும், அதன்பிறகு அவை அமெரிக்காவின் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இரான் நாட்டின் வருவாயில் பிரதானப் பங்கு வகிக்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வருவதன் மூலம், அந்த வருவாய் கிடைக்கச் செய்யாமல் தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

இந்தப் பொருளாதாரத் தடைகள் சட்டவிரோதமானவை என்று ஈரான் கூறியுள்ளது. இந்த விதிவிலக்குகளுக்கு “எந்த மதிப்பு அல்லது நம்பகத்தன்மையையும்” அளிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளது.

இரானுக்கும், உலகின் ஆறு வல்லாதிக்க நாடுகளுக்கும் இடையிலான 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு ரத்து செய்த திரு. ட்ரம்ப், இந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்தார்.

மேற்படி ஒப்பந்தத்தின்படி, பொருளாதாரத் தடைகளை நீக்கிக் கொண்டால், தனது அணுசக்தி செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்வதற்கும், சர்வதேச ஆய்வாளர்களை அனுமதிப்பதற்கும் ஈரான் ஒப்புக்கொண்டிருந்தது.

அணுசக்தி செயல்பாடுகள் மட்டுமின்றி, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தயாரிக்கும் திட்டத்தையும், மத்திய கிழக்கில் அவதூறு ஏற்படுத்தும் செயல்பாடுகள்'' என அதிகாரிகள் கூறும் செயல்பாடுகளையும் சேர்க்கும் வகையில்புதிய ஒப்பந்தம்” ஒன்றை உருவாக்க ஈரானுக்கு நெருக்குதல் தருவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டிருக்கிறது.

பொருளாதாரத் தடைகளால் ஈரானின் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. அதன் கரன்சிக்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மதிப்பு குறைந்திருக்கிறது.ஆண்டு பணவீக்கம் நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவதற்கு தயங்கும் நிலை ஏற்பட்டு, போராட்டங்கள் உருவாகியுள்ளன.

விதிவிலக்குகள் ஏன் புதுப்பிக்கப்படவில்லை?

ஈரான் பொருளாதாரத்தின் “முக்கிய அங்கமாக” அதிகாரிகளால் கருதப்படும் எரிசக்தி,கப்பல் கட்டுதல், கப்பல் போக்குவரத்து மற்றும் வங்கித் துறைகள் மீது கடந்த நவம்பர் மாதம் அமெரிக்கா மீண்டும் தடைகள் விதித்தது.

இருந்தபோதிலும்,ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் எட்டு பிரதான நாடுகளுக்கு – சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, தைவான், துருக்கி, இத்தாலிமற்றும் கிரீஸ் – பொருளாதார அபராதங்களில் இருந்து ஆறு மாத காலத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது. தங்களுடைய தேவைகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்வதற்கும், உலக கச்சா எண்ணெய் சந்தையில் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவும் இந்த விலக்கு அளிக்கப்பட்டது.

இவற்றில் கிரீஸ், இத்தாலி, தைவான் ஆகிய நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டுவிட்டன. ஆனால், இந்த விதிவிலக்கு காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று மற்ற ஐந்து நாடுகளும் கோரிக்கை விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

விதிவிலக்குகளைப் புதுப்பிப்பதில்லை என்று திரு. ட்ரம்ப் எடுத்திருக்கும் முடிவு தங்களுடைய அரசு நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு நோக்கங்களைக் கருத்தில் கொண்டு, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும், அழுத்தம் தரக் கூடிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கை'' என்பதைக் காட்டுவதாக இருக்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் போம்பியோ கூறியுள்ளார்.உலக கச்சா எண்ணெய் சந்தையில் பாதிப்பு இல்லாத நிலையை பராமரிக்கும் வகையில்” இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஈரானின் கச்சா எண்ணெயில் இருந்து மாற்று ஏற்பாடுகளுக்கு மாறிக் கொள்ளும் விஷயத்தில் எங்களுடைய தோழமை நாடுகளுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

“இந்த மாறுதலை எளிதாக்க வேண்டும் என்றும், போதிய அளவுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சவூதி அரேபியா, ஐக்கிய அமீரகம் மற்றும் இதர கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளுடன் நாங்கள் விரிவான மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறோம். அமெரிக்காவின் உற்பத்தியை அதிகரிப்பதுடன், இப்போதைய நடவடிக்கையும் சேருவது, எரிசக்தி சந்தையில் போதிய கச்சா எண்ணெய் கிடைத்துக் கொண்டிருக்கும் என்ற எங்களுடைய நம்பிக்கை அதிகரித்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Presentational grey line

எண்ணெய்க்கான நெருக்கடி அமெரிக்க உரசலை அதிகரிக்கிறது

கடந்த சில வாரங்களில் ஜப்பானும், தென் கொரியாவும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டன அல்லது பெருமளவு குறைத்துக் கொண்டுள்ளன. இரு நாடுகளுமே வெளிநாட்டு கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியுள்ளன. மாற்று வழிகளை கண்டறிவதற்கு அரசு நிர்வாகம் முயற்சி செய்து கொண்டிருப்பதாக திரு. பாம்பியோ தெரிவித்துள்ளார். ஏற்கெனவே வடகொரியாவுடனான அமெரிக்க கொள்கை மற்றும் வர்த்தக விவகாரங்களில் உறவுகள் மோசமாகியுள்ள நிலையில் – அதற்கு நெருக்கமான நாடுகளுடன் உறவு மோசமாகியுள்ள நிலையில், திங்கள்கிழமை மேற்கொண்டுள்ள நடவடிக்கை மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சரியும் பணமதிப்பு

வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இது இந்தியாவுக்கு இன்னும் பெரிய பிரச்சினையாக இருக்கும். இந்தியாவுக்கான பிரதான எண்ணெய் வழங்கும் நாடுகளில் ஒன்றாக ஈரான் இருக்கிறது. ஆனால், ஈரானுடன் இந்தியாவுக்கு ஆழமான கலாசார மற்றும் அரசியல் உறவுகள் உள்ளன. ஈரானை தனிமைப்படுத்துவதற்கு அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிகளில் இந்தியாவும் சேர்ந்து கொள்வது சிரமமான விஷயமாக இருக்கும்.

ஈரானின் மற்றொரு பெரிய வாடிக்கையாளராக சீனா இருக்கிறது. அமெரிக்காவின் முடிவை சீனா கண்டித்திருக்கிறது. தங்களுடைய வர்த்தகம் சட்டரீதியாக சரியானது தான் என்றும், இதில் அமெரிக்கா தலையிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் கூறியுள்ளது. அமெரிக்க நிதி துறை நடவடிக்கைகளுடன் தொடர்பில்லாத கம்பெனிகள் மூலம், இந்தத் தடைகளை சீனா எப்படி தவிர்க்கப் போகிறது என்பது தான் இப்போதைய கேள்வியாக உள்ளது.

விதிவிலக்கை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவதில் துருக்கி மிகவும் வெளிப்படையாக இருக்கிறது. தங்களுக்கு கச்சா எண்ணெய் தேவை அதிகமாக இருப்பதாகவும், அருகில் உள்ள நாடு என்ற வகையில் ஈரானுடன் உறவுகளை முறித்துக் கொள்ள முடியாது என்றும் துருக்கி கூறுகிறது. எப்படி இருந்தாலும், அழுத்தம் தரும் நடவடிக்கைக்கு பலன் கிடைக்காது என்றும் துருக்கி கூறியுள்ளது.

Presentational grey line

“உலக கச்சா எண்ணெய் சந்தையில் எண்ணெய் கிடைக்காத நிலை ஏற்பட்டுவிடாமல் போவதைத் தவிர்க்க” சக எண்ணெய் வள நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படப் போவதாக சவூதி எரிசக்தித் துறை அமைச்சர் காலித் அல்-பாலிஹ் கூறியுள்ளார்.

ஈரானின் இப்போதைய கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஒரு நாளுக்கு 1 மில்லியன் பேரல்களுக்கும் குறைவாகவே உள்ளது. கடந்த மே மாதம் அணு சக்தி ஒப்பந்தத்தை திரு. ட்ரம்ப் ரத்து செய்வதற்கு முன்பு இது ஒரு நாளுக்கு 2.5 மில்லியன் பேரல்களுக்கும் அதிகமாக இருந்தது.

கச்சா எண்ணெய் விலைகளில் தாக்கம் என்ன?

கச்சா எண்ணெயின் சர்வதேச விலை திங்கள்கிழமை 3.33% உயர்ந்து ஒரு பேரலுக்கு 74.37 டாலராக இருந்தது. நவம்பர் 1 க்குப் பிறகு இது அதிகபட்ச விலையாகும்.

பெட்ரோலிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பிற்கும் (ஒபெக்), ரஷியா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளுக்கும் இடையில் சமீபத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி தங்கள் உற்பத்தியை ஒரு நாளுக்கு 1.2 பில்லியன் பேரல்களா குறைத்துக் கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட நாடுகள் கருத்து என்ன?

திரு. ட்ரம்பின் முடிவால் எந்த பாதிப்பும் இல்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார். “விதிவிலக்குகளுக்கு எந்த மதிப்போ அல்லது நம்பகத்தன்மையோ நாங்கள் தரவில்லை” என்று அவர் கூறினார்.

ஆனால், பொருளாதாரத் தடைகளின் எதிர்மறை விளைவுகளை அடுத்து, தனது சர்வதேச பங்காளர் நாடுகளுடன் ஈரான் “தொடர்ந்து தொடர்பில்” இருப்பதாகவும், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அப்பாஸ் மவ்சவி கூறியுள்ளார்.

“ஒருதலைபட்சமான தடைகளையும், அருகில் உள்ள நாடுகளுடன் உறவுகளை எப்படி கையாள வேண்டும் என்ற கட்டுப்பாடுகளையும் துருக்கி நிராகரித்துவிட்டது” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஒருதலைபட்சமான தடைகளை எதிர்ப்பதாக முன்பு சீனா கூறியுள்ளது.

இரான் அமெரிக்கா எண்ணெய் சச்சரவு - விளைவுகள் என்னென்ன?

“சீனா – ஈரான் ஒத்துழைப்பு வெளிப்படயானது, ஒளிவுமறைவற்றது, சட்டத்தின்படி அமைந்தது. அதற்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும்” என்று வெளியுறவுத் துறை அதிகாரி ஜெங் ஷுவாங் செய்தியாளர்களிடம் கூறினார்.

“ஜப்பானிய கம்பெனிகளின் செயல்பாடுகளில் எதிர்மறை விளைவுகள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது” என்று ஜப்பானின் அமைச்சரவை தலைமைச் செயலாளர் யோஷிஹிடே சுகா கூறியதாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கூறியுள்ளது. அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் ஈரானிடம் இருந்து இறக்குமதியை மார்ச் மாதத்தில் நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் அறிவிப்புகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இந்திய அரசு ஆய்வு செய்து வருகிறது என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி பி.டி.ஐ. செய்தி நிறுவனம் கூறியுள்ளது. ஈரானிடம் இருந்து இறக்குமதியை படிப்படியாகக் குறைப்பதற்கு அனுமதி கிடைக்கும் என்று இந்தியா நம்புவதாகக் கூறப்படுகிறது.

தென் கொரியா நான்கு மாதங்களாக ஈரானிடம் இருந்து இறக்குமதியை நிறுத்தியது. ஆனால் ஜனவரியில் மீண்டும் இறக்குமதியைத் தொடங்கியது. மார்ச் மாதத்தில் அந்த நாடு தினமும் 284,600 பேரல்கள் இறக்குமதி செய்தது. -BBC_Tamil