போர் நிறுத்தத்திற்கு லிபிய அரசு அழைப்பு

லிபியத் தலைநகர் திரிபோலியின் புறநகர்ப் பகுதிகளில் நேற்று கடாபி எதிர்ப்பாளர்கள் புகுந்து லிபிய இராணுவத்தின் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதனால், இன்னும் ஓரிரு நாட்களில் கடாபி இராணுவம் தோல்வி அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் லிபிய அரசுத் தரப்பில் உடனடிப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திரிபோலியில் இருந்து 160 கிலோ மீற்றர் கிழக்கில் உள்ள ஜ்லிடான் நகர் நேற்று முன்தினம் கடாபி எதிர்ப்பாளர்கள் வசம் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட எதிர்ப்புப் படையினர் திரிபோலியின் புறநகர்ப் பகுதிகளை நேற்று எட்டினர்.

இதையடுத்து, அங்கு நிலை கொண்டிருந்த கடாபி இராணுவத்துடன் கடும் மோதல் நடந்தது. சிறு பீரங்கிகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் கடாபி இராணுவ வீரர்கள் எதிர்ப்பாளர்களைத் தாக்கினர்.

கடற்பகுதி முழுவதையும், ‘நேட்டோ’ கடற்படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள அதேவேளை திரிபோலியின் மையப் பகுதியில் உள்ள மிட்டிகா விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த லிபிய இராணுவ வீரர்கள் அந்நிலையத்தைக் கைவிட்டுச் சென்றதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்ப்பாளர்களின் கை ஓங்கி வரும் இச்சூழலில் லிபிய உள்துறை அமைச்சர் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.