இலங்கை குண்டுவெடிப்பு: தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க முயல்கிறதா ஐ.எஸ் குழு?

இலங்கையில் ஈஸ்டர் தினமான கடந்த 21ஆம் தேதி தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் இதுவரை 253 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. தாக்குதல் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டது உள்ளூரில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புதான் என இலங்கை அரசு கூறுகிறது. ஆனால், இஸ்லாமிய அரசு என்று தங்களைக் கூறிக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அறிவித்தது.

தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது எப்படி?

கோப்புப்படம்

இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டு 2 நாட்களுக்கு பிறகே, ஐ.எஸ் அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது. அதன் செய்தி நிறுவனமான ‘அமெக்’ என்ற இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியானது.

தாமதமாக பொறுப்பேற்றதன் மூலம் ஐ.எஸ் அமைப்பு தானே தாக்குதலில் ஈடுபட்டதா என சந்தேகம் எழுகிறது. இவ்வாறு தாமதமாக அறிவிப்பது ஐ.எஸ் அமைப்புக்கு வழக்கமானது இல்லை.

ஆனால், தொடர் தாக்குதல் இன்னும் முடிவடைந்ததா இல்லையா என காத்திருத்து பின்னர் அறிவிப்பை வெளியிட்டுருக்கலாம். அல்லது, அதற்கான ஆதாராங்களை திரட்டுவதற்காக தாமதமாகியிருக்கலாம். நேரடியாக தொடர்பில்லாவிட்டாலும், உள்ளூர் அமைப்புகளுக்கு ஐ.எஸ் உதவியிருக்கலாம். தாக்குதல் நடத்தப்பட்ட தொழில்நுட்ப உத்திகள் ஐ.எஸ் அமைப்பின் தாக்குதலுடன் ஒத்திருப்பதாகத் தெரிகிறது.

எழுத்துப்பூர்வமாக தெரிவித்த பின்னர், தாக்குதலில் 7 பேர் ஈடுபட்டதாக, புகைப்படம் மற்றும் காணொளி ஒன்றையும் ஐ.எஸ் வெளியிட்டது.

புகைப்படத்தில் இருக்கும் நபர்களில் ஒருவர் முகமூடி அணியவில்லை. அந்த நபர் அபு உபய்தா என்று அறியப்படும் அந்த நபர் உள்ளூர் பயங்கரவாதியான சஹ்ரான் காசிம் என்று நம்பப்படுகிறது.

இலங்கை தாக்குதல்களுக்கு சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் சஹ்ரான் காசிம்
இலங்கை தாக்குதல்களுக்கு சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் சஹ்ரான் காசிம்

ஏழு பேர் தாக்குதலில் ஈடுபட்டதாக ஐ.எஸ் கூறியது. ஆனால், அந்த குழுப் புகைப்படம் மற்றும் காணொளியில் 8 பேர் இருக்கிறார்கள்.

அத்துடன் ஐ.எஸ் வெளியிட்ட காணொளி சில மணிநேரங்களுக்கு முன்னர், சமூக வலைதளங்களில் ஏற்கனவே பகிரப்பட்டவை.

தாக்குதலில் ஈடுபட்டவர்களாக குறிப்பிடப்பட்டவர்களின் பெயர்களும் ஏற்கனவே வெளியானவைதான். சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம் மற்றும் பெயர்கள் தொடர்புபடுத்தி தாங்கள்தான் தாக்குதல் நடத்தியதாக ஐ.எஸ் கூறியிருக்கலாம்.

விவாதப் பொருளாக தொடர்ந்து இருக்க முயற்சியா?

சிரியாவில் ஆதிக்கம் சரிவு கண்டவுடன், ஐ.எஸ் அமைப்பின் வலிமை ஒழிந்ததாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், தாங்கள் சரியவில்லை என்பதை தெரியப்படுத்த உலகளவில் தொடர்ந்து தலைப்பு செய்திகளில் வர ஐ.எஸ் அமைப்பு திட்டமிட்டு வேலைகளை செய்கிறது எனலாம்.

மார்ச் மாத இறுதியில், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான மாலி, பர்கினா பாசோவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கும் தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

காத்தான்குடி

பின்னர், காங்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் தங்களால்தான் நடந்ததாக கூறியது. தற்போது, இலங்கையிலும் பொறுப்பேற்றுள்ளது.

காங்கோ மற்றும் இலங்கையில் இதற்கு முன்பு, நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றதில்லை. இலங்கையில் ஐ.எஸ் அமைப்பால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று அதன் ஆதரவு அமைப்புகள் செய்தியை பரவவிட்டு, அதன்மூலம் வன்முறை கட்டவிழ்க்க உள்ளூர் அமைப்புகள் முயற்சிக்கின்றன.

நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியா?

கிறித்தவர்கள் மற்றும் அவர்களின் வழிப்பாட்டு தளங்களில் ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் நடத்துவது புதிதல்ல.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எகிப்தில் ஒரு தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 40-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

கடந்த ஜனவரியில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு தேவாலயம் மீது நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றது.

இதேபோல், இந்தோனீசியா மற்றும் பிரான்ஸில் கிறிஸ்தவ தளங்கள் மீது நடந்த தாக்குதலுக்கு இந்த அமைப்புதான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனால், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, நியூசிலாந்து நாட்டில் கிறிஸ்சர்ச்சில் மசூதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறுகிறார். முதற்கட்ட விசாரணையில் இந்த சந்தேகம் வருவதாக தெரிவிக்கிறார்.

நியூசிலாந்து கிறைஸ்சர்ச் தாக்கதல் பற்றிய விசாரணை
நியூசிலாந்து கிறைஸ்சர்ச் தாக்கதல் பற்றிய விசாரணை

ஆனால், ஐ.எஸ் அமைப்பு இதுபற்றி குறிப்பிடவில்லை. ஐ.எஸ் ஆதரவு அமைப்புகள் மட்டும் சமூக வலைதளங்களில் இரண்டு தாக்குதல்களையும் தொடர்புப்படுத்தி வருகின்றன.

யார் அந்த தற்கொலை தாக்குதலாளிகள்?

தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள்தான் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நன்கு கல்வி கற்றவர்கள். சிலர் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்றுள்ளார்.

வங்கதேச தலைநகர் டாக்காவில், கடந்த 2016-ல் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலை நடத்தியவர்களும் நன்கு கல்வி கற்றவர்கள், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

அதிலும், உள்ளூர் அமைப்புகள் உதவியுடன் ஐ.எஸ் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. ஐ.எஸ் கொடியுடன் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் புகைப்படம் ஒன்றும் அதற்கான ஆதாரமாக அப்போது வெளியிடப்பட்டது. இதுபோன்ற சில விவரங்களில் இரண்டு சம்பவங்களும் ஒத்துப்போகிறது.

உள்ளூர் அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் மீதுதான் இலங்கை அரசு சந்தேகப்படுகிறது. ஆனால் நிச்சயம் வெளியில் உள்ள ஏதோ ஓர் அமைப்பு இவர்களுக்கு உதவியிருப்பதில் சந்தேகமில்லை.

இலங்கை தாக்குதலை பொறுத்தவரை மூளையாக செயல்பட்டது சஹ்ரான் காசிம் என்று கூறப்படுகிறது. ஐ.எஸ் வெளியிட்ட புகைப்படத்தில் முகமூடி அணியாமல் இருக்கும் ஒரே நபர் இவர்தான்.

கடந்த 2016-ல் இலங்கை அரசு தெரிவித்த தகலில், இலங்கையை சேர்ந்த, சில படித்த இளைஞர்கள், ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து சிரியாவில் சண்டையிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது நடந்த தாக்குதல் இவர்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களால்தான் தாக்குதல் நடந்தது என்பதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை. -BBC_Tamil