இந்தோனீசியாவில் தேர்தல் பணிச்சுமையால் உயிரிழந்த 272 ஊழியர்கள்

இந்தோனீசியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பணியாற்றியதால் உண்டான பணிச்சுமையால் 272 தேர்தல் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலானவர்களின் உயிரிழப்புக்கான காரணம் அயர்ச்சியுடன் தொடர்புடையவை என்று கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது 1,878 ஊழியர்கள் உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக இந்தோனீசியாவின் பொது தேர்தல் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் ஆரீப் பிரியோ சுசாந்தோ தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 17 அன்று நடந்த வாக்குபதிவின் கண்காணிப்பு மற்றும் வாக்குகளை என்னும் பணியில் சுமார் 70 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இரவு நேரங்களில்கூட அவர்கள் கடுமையாக பணியாற்ற வேண்டியிருந்தது, அவர்கள் உடல்நலத்தைப் பாதித்தது.

பொருட்செலவைக் குறைக்க இந்தோனீசிய வரலாற்றிலேயே முதல் முறையாக அதிபர் தேர்தல், தேசிய நாடாளுமன்றம், பிராந்திய நாடாளுமன்றங்கள் ஆகியவற்றுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட்டது.

26 கோடி மக்கள்தொகை கொண்ட அந்த நாட்டில் 19.3 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். சுமார் 80% வாக்குகள் பதிவாகின. இந்தோனீசியா முழுதும் சுமார் எட்டு லட்சம் மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

election 2019

நிரந்தர அரசுப் பணியாளர்களைப் போல முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனை செய்யப்படாமல் பணிக்கு நியமனம் செய்யப்பட்டதால், தற்காலிக தேர்தல் பணியாளர்கள் உயிரிழந்த எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததாகக் கருதப்படுகிறது.

ஒரே சமயத்தில் தேசிய மற்றும் பிராந்தியத் தேர்தல்களை நடத்த விரும்பிய அரசு, பணிச்சுமையால் உயிரிழந்த ஊழியர்களின் ஆற்றலை முன்னரே கணிக்கவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 36 மில்லியன் ருபியா இழப்பீடு வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. -BBC_Tamil