பெண்களுக்கான திருமண வயதை 18 ஆக நிர்ணயித்து பாகிஸ்தான்; பாராளுமன்றத்தில் சட்டம்!

சிறுமியர்களை பலவந்தப்படுத்தி திருமணம் செய்யும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெண்களுக்கான திருமண வயதை 18 ஆக நிர்ணயித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது.

பாகிஸ்தான் நாட்டின் சில பகுதிகளில் 12, 13 வயதான சிறுமிகளை பெற்றோர்கள் பலவந்தப்படுத்தி திருமணம் செய்து வைக்கும் பழக்கவழக்கம் நடைமுறையில் உள்ளது. இதை தடுப்பதற்காக பாகிஸ்தான் குழந்தை திருமணச் சட்டத்தில் மாற்றம்செய்யும் புதிய மசோதாவை பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த எம்.பி. ஷெர்ரி ரஹ்மான் என்பவர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பெண்களின் பொதுவான பூப்பெய்தும் வயது மற்றும் திருமணத்துக்கான உடல்ரீதியான தகுதிக்குரிய வயதை 18 ஆக நிர்ணயிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவின் மீது பாராளுமன்றத்தில் நேற்று காரசாரமான விவாதம் நடந்தது.

பெண்களின் பூப்பெய்தும் வயது அவரவர் உடல்கூறுகளுக்கேற்ப மாறுபடலாம். இதை நாம் ஒரு பொது வயதாக நிர்ணயம் செய்ய முடியாது என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதாவை இஸ்லாமிய சித்தாந்த குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கபூர் ஹைதரி என்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த மதவிவகாரங்கள் துறை மந்திரி நூருல் காத்ரி, இதைப்போன்ற ஒரு மசோதா கடந்த 2010-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டு, இஸ்லாமிய சித்தாந்த குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ‘பெண்கள் பருவமடையும் வயதை நாம் நிர்ணயிக்கக்கூடாது. அது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரண்பாடானது’ என பல மாதங்களுக்கு பின்னர் அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்டதாக குறிப்பிட்டார்.

ஷெர்ரி ரஹ்மான்

பின்னர், இந்த மசோதாவின் மீது விரிவாக பேசிய ஷெர்ரி ரஹ்மான், அல்ஜீரியாவில் பெண்களின் திருமண வயது 19 என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. வங்காளதேசம், எகிப்து, துருக்கி, மொராக்கோ, ஓமன், ஐக்கிய அமீரக நாடுகள் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளிலும் 18 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

வாக்குரிமை, தேசிய குடியுரிமை அட்டை போன்றவற்றை பெறுவதற்கு வயதுவரம்பு 18 ஆக இருக்கும் நிலையில் பெண்களின் திருமண வயதும் 18 ஆக மாற்றுவதில் தவறில்லை என்று வாதாடினார்.

மேலும், நமது நாட்டில் திருமணம் செய்து கொடுக்கப்படும் பெண்களில் 21 சதவீதம் பேர் 18 வயதுக்கும் குறைவானவர்களாக இருப்பதால் இங்கு இளம்வயது திருமணத்தால் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் உயிரிழக்கும் அவலத்தை நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டியுள்ளது என வலியுறுத்தினார்.

இந்த மசோதா மீது நடந்த வாக்கெடுப்பில் 5 உறுப்பினர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியது.

இந்த சட்டத்தை மீறி சிறுமியரை திருமணம் செய்துகொண்டால் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in