அடுத்து எந்த நாட்டில் தாக்குதல் நடத்தப்பட உள்ளது என்பதை, பெங்காலி மொழியில் எழுதப்பட்ட ஒரு சுவரொட்டியின் மூலம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு சூசமாக அறிவித்துள்ளது.
உலக நாடுகள் பலவற்றாலும் தடை செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பானது, கடந்த 21-ம் திகதியன்று இலங்கையில் நடத்திய கொடூரமான தாக்குதலில் 253 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர்.
இந்த சம்பவமானது உலக நாடுகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதிலிருந்து மீண்டு வருவதற்கான போர்க்கால நடவடிக்கையில் அந்நாட்டு அரசு செயல்பட்டு வருகிறது.
தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த குற்றவாளிகள் பலரையும் கைது செய்யவும் நடவடிக்கையில் இலங்கை நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஐஎஸ் அமைப்பு ஒரு சுவரொட்டியின் மூலம் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. அந்த சுவரொட்டியில் பெங்காலி மொழியில், “விரைவில் வருகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது பங்களாதேஷ் அல்லது மேற்கு வங்கத்தில் தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதை கூறுவதாக தெரிகிறது.
இந்த சுவரொட்டி குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதை புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளன.
வியாழக்கிழமையன்று இந்த சுவரொட்டியானது வெளியிடப்பட்டுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியாவின் தகவல்களின்படி, அல் முர்சுலாட் என்றழைக்கப்படும் குழுவின் சின்னத்தையும் இந்த சுவரொட்டி கொண்டுள்ளது.
இஸ்லாமிய அமைப்பானது உள்ளுரில் செயல்பட்டு வரும் ஜமாதுல் முஜாகிதீன் (JMB) என்கிற பயங்கரவாத பிரிவினரின் மூலம் ஏற்கனவே வங்காளதேசத்தில் வலுவான பிடியைக் கொண்டுள்ளது.
மூன்று வருடங்களுக்கு முன்பாக JMB அமைப்பு, மேற்கு வங்கத்தில் உள்ள பல மாவட்டங்களில் இளைஞர்களை தங்களுடைய அமைப்பில் சேருமாறு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-eelamnews.co.uk