செளதி அரேபியா: சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டிய பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விடுதலை

செளதி அரேபிய அரசு நான்கு பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்களை தற்காலிகமாக விடுதலை செய்துள்ளது.

கடந்தாண்டு 11 பெண் செயற்பாட்டாளர்கள் செளதியில் கைது செய்யப்பட்டனர். இந்த நான்கு பேர் உட்பட இதுவரை ஏழு பேர் கடந்த இரண்டு மாதங்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஹதூன் அல் ஃபாஸி, அமல் அல் ஹர்பி, மைசா அல் மைன், அபீர் நமன்கானி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டனை தலைமையகமாக கொண்ட செளதி மனித உரிமை அமைப்பொன்று கூறுகிறது.

ஆனால், இதனை செளதி அதிகாரிகள் இன்னும் உறுதிபடுத்தவில்லை.

என்ன நிபந்தனையில் விடுவிக்கப்படுகிறார்கள், எப்போது சிறையிலிருந்து வெளியே வருவார்கள் என தெளிவாக தெரியவில்லை.

சர்வதேச சமூகம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இவர்களை ரியாத் விடுவித்துள்ளது.

பெண்கள் வாகனம் ஓட்டுவதில் இருந்த தடை நீக்கப்படுவதற்கு சில காலம் முன்பு இவர்கள் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டனர்.

பெண்கள் வாகனம் ஓட்டுவதில் இருந்த தடை நீக்கப்படுவதற்கு சில காலம் முன்பு இவர்கள் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டனர்.

ஏன் கைது செய்யப்பட்டனர்?

தேசிய நலனுக்கு குந்தகம் விளைவித்த காரணத்திற்காக இந்த 11 பேரும் கைது செய்யப்பட்டதாக அரசு தரப்பு கூறியது.

வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்பு வைத்து இருந்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றது அரசு.

சிறையில் தாங்கள் சித்திரவதைகள் சந்தித்ததாகவும், பாலியல் ரீதியாக துன்புறத்தப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களில் சிலர் கூறினார்கள். ஆனால், செளதி அரசு இதனை மறுத்தது.

மாற்றம் குறித்த நம்பிக்கை

மார்ச் மாதம் 36 அரசுகள் ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இந்த கைது சம்பவத்தை கண்டித்தன.

செளதி அரேபியா: பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விடுதலை

அதனை தொடர்ந்து மூன்று செயற்பாட்டாளர்கள் விடுவிக்கப்பட்டனர். இது மாற்றம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியது.

ஆனால், அடுத்த மாதமே அதாவது ஏப்ரல் மாதம், ஒரு கர்ப்பிணி பெண்ணையும், அமெரிக்கா மற்றும் அரேபியா குடியுரிமை வைத்திருந்த இரண்டு பேரையும் செளதி கைது செய்தது.

கைது செய்யப்பட்ட இவர்கள் மாற்றம், சீர்திருத்தம் குறித்து தொடர்ந்து எழுதி வந்த வலைப்பூ எழுத்தாளர்கள்.

இஸ்தான்புலில் உள்ள செளதி தூதரகத்தில் கஷோக்ஜி கொல்லப்பட்ட பின், செளதியில் மனித உரிமை செயல்பாடுகளை ஒடுக்குவது தீவிரமாகி உள்ளது.

இந்தக் கொலையில் செளதி முடி இளவரசர் முகம்மது பின் சல்மானை குற்றஞ்சாட்டியது துருக்கி. -BBC_Tamil