இங்கிலாந்திலும் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக எம்ஐ5 உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது உலக நாடுகளை உலுக்கியுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் சிறிய நாடுகளை இலக்காக வைத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்திலும் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக எம்ஐ5 உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இங்கிலாந்து மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இலங்கையை போன்று சிலிப்பர் செல்களை கொண்டு தாக்குதலை நடத்த சதிதிட்டம் தீட்டியுள்ளனர் என உளவுத்துறை உள்ளீடு கிடைக்கப்பெற்றுள்ளது. 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட இலங்கை தாக்குதலில் முக்கிய தற்கொலை தாரியான அப்துல் லுதிப் ஜமீல் முகமது 2006-2007ல் இங்கிலாந்தின் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். அப்போதே கடும் போக்குடன் பேசுபவர் எனவும் இங்கிலாந்து அரசு பல்கலைக்கழகத்தை எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியது.
பயங்கரவாதி ஜமீல் ஆஸ்திரேலியாவிலும் மேற்கொண்டு படித்துள்ளான். சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பையும் பெற்றுள்ளான் என தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் இருந்தும் பலர் சிரியா ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைய சென்றனர். ஜமீல் அமைதியாக நாடு திரும்பிய பின்னர் உதிரியாக இருந்து பயங்கரவாத தாக்குதலை முன்னெடுத்துள்ளான்.
இப்போது இலங்கையை போன்று இங்கிலாந்திலும் சிலிப்பர் செல்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் இங்கிலாந்து நேரடியாக களமிறங்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள தேவாலயங்கள், மசூதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் தோல்வியை தழுவிய பயங்கரவாத இயக்கம் பிற நாடுகளில் சிலிப்பர் செல்களை கொண்டு தாக்குதலை நடத்தலாம் என வல்லுநர்களும் எச்சரிக்கிறார்கள்.
-athirvu.in