ஜாமீன் முடிந்ததும் பேரணியாக மீண்டும் ஜெயிலுக்கு திரும்பிய நவாஸ் செரீப்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பை அவரது கட்சியினர் வீட்டில் இருந்து பேரணியாக அழைத்து சென்று சிறையில் ஒப்படைத்தனர். பேரணியில் ஏராளமான கார்கள் மற்றும் லாரிகள் இடம் பெற்றன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.

உடல் நிலையை காரணம் காட்டி சிகிச்சை பெறுவதற்காக சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 26-ந்தேதி முதல் 6 வாரத்துக்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் தனக்கு நிரந்தர ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையே அவரது ஜாமீன் நேற்றுடன் முடிவடைந்தது. எனவே அவர் கோட் லக்பத் சிறைக்கு மீண்டும் திரும்பினார்.

அவரை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினர் வீட்டில் இருந்து பேரணியாக அழைத்து சென்று சிறையில் ஒப்படைத்தனர். பேரணியில் ஏராளமான கார்கள் மற்றும் லாரிகள் இடம் பெற்றன.

முன்னால் சென்ற காரில் நவாஸ்செரீப் அமர்ந்து இருந்தார். அவருடன் மகள் மரியம், தம்பி மகன் ஹம்சா ஷெபாஸ் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பட்டாசு மற்றும் வாண வேடிக்கை நடத்தப்பட்டது.

பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வாகனங்களில் கலந்து கொண்டதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேரணி இரவில் ஜெயிலை சென்று அடைந்ததும், சிறை அதிகாரிகளிடம் நவாஸ் ஒப்படைக்கப்பட்டார்.

-athirvu.in