இரான் அணு ஒப்பந்தம்: செறிவூட்டப்பட்ட யுரேனியம் குறித்து அதிபர் ரூஹானி முக்கிய அறிவிப்பு

கடந்த 2015ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் எல்லா அம்சங்களுக்கும் இனி கட்டுப்பட முடியாது என இரான் கூறியிருப்பது அணு ஆயுத தயாரிப்புக்கான மிரட்டலாகும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இரான் அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாப்பதற்கு இதில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இரானும், ரஷ்யாவும் வலியுறுத்திய சற்று நேரத்திற்கு பின்னர் இந்த கூற்று வந்துள்ளது.

2015ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் ஏனைய தரப்புகள், தங்களின் கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோஃப் கூறியுள்ளார்.

இரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய ஓராண்டை அடையாளப்படுத்தும் வகையில், செறிவூட்டப்பட்ட யரேனியத்தை வெளிநாடுகளுக்கு விற்பதை உடனடியாக நிறுத்தப்போவதாக இரான் அதிபர் ஹசன் ரூஹானி கூறிய பின்னர் லாவ்ரோஃப் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்

அணுசக்தி ஒப்பந்தத்தின் எல்லா அம்சங்களுக்கும் இனி கட்டுப்பட முடியாது என இரான் கூறியிருப்பதன் நோக்கம் தெளிவாக தெரியவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ தெரிவித்திருக்கிறார்,

பிரிட்டன் வெளியுறவு அமைச்சரோடு நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர், இரானின் உண்மையாயன செயல்பாடுகள் என்ன என்பதை அமெரிக்கா பொறுத்திருந்து பார்க்கும் என்று அவர் கூறியுள்ளார்,

2015ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தின் எல்லா அம்சங்களுக்கும் இனி கட்டுப்பட முடியாது இரான் முன்னதாக தெரிவித்தது.

அணு மின் உற்பத்தி செய்த பிறகு மீதி இருக்கின்ற செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளில் விற்றுவிடுவதற்கு பதிலாக உள்நாட்டிலேயே சேமித்து வைக்கப்போவதாக இரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

அறுபது நாட்களில் உயரிய நிலையிலான யுரேனிய செறிவூட்டலை மீண்டும் உருவாக்கப்போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இரானின் அணுசக்தி அபிலாஷைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு, அதன் மீதான பொருளாதாரத் தடைகளை அகற்றி கொள்வதாக கூறி இரான் அணுசக்தி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது முதல் இரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் சர்ச்சை தோன்றியது.

அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதித்தால், இரானின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,

இரான் எடுத்துள்ள முடிவை அணுசக்தி ஒப்பந்தத்தின் பிற உறுப்பு நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகளிடம் புதன்கிழமை காலை தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் உரிமைகளுக்குள் இரான் செயல்பட்டதாகவும், ஐரோப்பியாவின் மூன்று நாடுகள் செயல்பட வேண்டியிருப்பதாகவும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜாவிட் ஸெரிஃப் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்து பிரெஞ்ச் ஊடகங்களிடம் பேசியுள்ள பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஃபிளாரன்ஸ் பார்லி, இரான் அணுசக்தி ஒப்பந்ததை செயல்படும் வகையில் பராமரிக்க ஐரோப்பிய நாடுகள் அனைத்து பணிகளையும் செய்து வந்ததாகவும், இந்த ஒப்பந்தம் பேணப்படாமல் இருந்தால் விளைவுகள் ஏற்படும். தடைகள் விதிக்கப்படும் சாத்தியமும் உள்ளது என்று கூறியுள்ளார்.

தற்போதைய நிலைமை ஏற்படுவதற்கு அமெரிக்காவே காரணம் என்று ரஷ்யாவும், சீனாவும் குற்றஞ்சாட்டியுள்ளன.

இலங்கை
இலங்கை

இந்த அணுசக்தி ஒப்பந்தம் மூலம், செறிவூட்டப்பட்டு யுரேனியத்தில் அதிகமாக இருப்பவற்றை சேமித்து கொள்ளாமல் இரான் வெளிநாடுகளுக்கு விற்க வேண்டும்.

அணு மின்சார உற்பத்தி செய்யும்போது கிடைக்கின்ற செறிவூட்டிய யுரேனியத்தை சேமித்து வைத்துகொண்டால் இரான் அணு ஆயுதங்களை செய்வதற்கு பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே, இந்த விடயம் மிகவும் முக்கியமாகும்.

சமீப காலங்களில் இரானுக்கு அமெரிக்கா அதிக அழுத்தங்களை வழங்கி வருகிறது,
சமீப காலங்களில் இரானுக்கு அமெரிக்கா அதிக அழுத்தங்களை வழங்கி வருகிறது

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இரான் வெளிநாடுகளுக்கு விற்பதன் மூலம், அணு மின்சாரம் தயாரிப்பதை இரான் தொடர்கின்ற வேளையில், அது அணு ஆயுதங்களை தயாரிக்காமல் இருப்பதையும் உறுதி செய்துகொள்ள முடியும்.

அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ இராக்கில் திட்டமிடாத பயணம் ஒன்றை மேற்கொண்ட பின்னரும், வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க விமானந்தாங்கி நிறுத்தப்பட்டுள்ள பின்னரும் இரானின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இரானிடம் இருந்து அமெரிக்க படைப்பிரிவுகளுக்கும், அதன் கூட்டாளி நாடுகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், எத்தகைய அச்சுறுதல் என்று தகவல்கள் எதையும் வழங்கவில்லை. -BBC_Tamil