ஈரான் உலோக ஏற்றுமதி மீது பொருளாதார தடை – அமெரிக்கா அதிரடி!

அணுசக்தி ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளை புறக்கணிப்பதாக ஈரான் அறிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் உலோக ஏற்றுமதி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

அணு ஆயுதங்களை அதிக அளவில் கையிருப்பு வைத்து, பிறநாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த ஈரானுடன் அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தின.

அணுசக்தி ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி ஈரான் தனது அணு ஆயுத கையிருப்பை படிப்படியாக குறைக்கவேண்டும். அதற்கு பிரதிபலனாக அந்நாட்டின் மீது விதித்த பொருளாதார தடைகளை மேற்கூறிய வல்லரசு நாடுகள் திரும்பப்பெற வேண்டும்.

ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாக தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஆண்டு மே மாதம் 8-ந் தேதி அறிவித்தார். அதனை தொடர்ந்து, ஈரான் மீது டிரம்ப் நிர்வாகம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.

இதனால் இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்காவின் தடைகளால் ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இந்த நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி, ஓராண்டு நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் ஈரான் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அணுசக்தி ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளை தற்காலிகமாக புறக்கணிப்பதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி அறிவித்தார். அதாவது, ஒப்பந்தத்தின்படி தம்மிடம் உள்ள மிகுதியான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை விற்கவேண்டும் என்ற நிபந்தனையை புறக்கணிப்பதோடு, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான யுரேனியத்தை செறிவூட்டும் பணியில் இனி ஈரான் ஈடுபடும்.

அத்துடன் அமெரிக்காவை தவிர்த்து, அணுசக்தி ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் மற்ற 5 நாடுகளும், இந்த ஒப்பந்தத்தை பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதியை 60 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் ஒப்பந்தத்தின் மேலும் சில நிபந்தனைகளை ஈரான் மீறும் என்றும் ஹசன் ருஹானி எச்சரித்தார்.

இந்த நிலையில், ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக அந்நாட்டின் உலோக ஏற்றுமதி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. எண்ணெய்க்கு அடுத்தபடியாக ஈரானின் 2-வது முக்கிய ஏற்றுமதிப் பொருள் உலோகங்கள் ஆகும். எனவே ஈரானுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா இந்த தடையை விதித்து இருக்கிறது.

இதற்கான நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். அப்போது பேசிய டிரம்ப், “தொழில்துறை உலோகங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈரானுக்கு கிடைக்கும் வருவாயை குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடையின் மூலம், தங்கள் நாட்டின் துறைமுகங்களில் ஈரான் நாட்டு உலோகங்களை அனுமதிப்பதை நாங்கள் சகித்துக்கொள்ளமாட்டோம் என்று பிற நாடுகளுக்கு அறிவிக்கிறோம்” என்றார்.

மேலும், “தங்கள் நடத்தையை அடிப்படையில் ஈரான் மாற்றிக்கொள்ளாவிட்டால், அந்நாடு மேலும் புதிய நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்” என்றும் டிரம்ப் எச்சரித்தார். அதே சமயம் ஈரான் தலைவர்களை சந்தித்துப்பேசி ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

-athirvu.in