தடுப்பில் தேசிய சபையின் பிரதித் தலைவர்

வெனிசுவேலா தேசிய சபையின் பிரதித் தலைவர் எட்கர் ஸம்பிரானோவை அந்நாடு பொலிவேரிய புலனாய்வுச் சேவையின் முகவர்கள் தடுத்து வைத்துள்ளனர். எட்கர் ஸம்பிரானோ உள்ளிருக்க, அவரது வாகனத்தை கயிறு கட்டி இழுத்துச் சென்றிருந்தனர்.

அந்தவகையில், வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவின் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியொன்றைத் தோற்றுவிக்க முயன்ற தோல்வியில் முடிவடைந்த முயற்சியொன்றைத் தொடர்ந்து உயர் பதவியிலுள்ள ஒருவரின் முதலாவது கைது இதாகும்.

பொலிவேரிய புலனாய்வுச் சேவையின் பிரவொன்று, தனது ஜனநாயக நடவடிக்கைக் கட்சியின் வெனிசுவேலாத் தலைநகர் கராகஸுக்கு வெளியே தனது வாகனத்தை இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 3.50 மணியளவில் சூழ்ந்ததாக டுவிட்டரில் தெரிவித்த எட்கர் ஸம்பிரானோ, தங்களது வாகனத்தை விட்டு வெளியேற்ற அனுமதிக்காத அவர்கள், தங்களது தலைமையத்துக்கு கட்டி இழுக்கும் ட்ரக்கொன்றைப் பயன்படுத்தி கொண்டு செல்வதாகக் கூறியிருந்தார்.

எட்கர் ஸம்பிரானோவினதும், தேசிய சபையின் வேறு ஆறு உறுப்பினர்களதும் எதிர்கால விசாரணைக்காக, தேசிய சபையின் சட்டவிலக்களிக்கும் அவர்களின் உரிமையை நீக்க வெனிசுவேலாவின் அரசமைப்புச் சபை கடந்த செவ்வாய்க்கிழமை இணங்கியிருந்தது.

முன்னதாக குறித்த தேசிய சபை உறுப்பினர்கள் மீது சதித்திட்டம், சதிப்புரட்சி, தேசத் துரோகத்தை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்த வெனிசுவேலாவின் உச்ச நீதிமன்றம், எதிரணியின் வேறு மூன்று அரசியல்வாதிகள் மீதும் இதே குற்றச்சாட்டை நேற்று முன்தினம் சுமத்தியிருந்தது.

-tamilmirror.lk