புர்கினா ஃபாசோ தேவாலயத்தில் தாக்குதல் – 6 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாசோவின் வடக்குப்பகுதியில் டாப்லோவில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கி ஏந்திய ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் அந்த தேவாலயத்தின் பாதிரியாரும் அடக்கம். தாக்குதல் நடந்தபோது வழிபாடு நடந்துகொண்டிருந்தது.

உள்ளூர் நேரப்படி ஞாயிறு காலை 9 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்தது.

20 முதல் 30 வரையிலான எண்ணிக்கையில் இருந்த தாக்குதல்தாரிகள் தேவாலயத்துக்கு தீ வைத்தனர்.

பிற கட்டடங்களுக்குத் தீ வைக்கப்பட்டு, ஒரு மருத்துவ மையமும் சூறையாடப்பட்டதாக அந்த நகரின் மேயர் ஊஸ்மன் ஜோங்கோ தெரிவித்துள்ளார்.

2016 முதல் ஜிஹாதிய வன்முறை அதிகம் நடந்துவரும் புர்கினோ ஃபாசோவில், கடந்த ஐந்து வாரங்களில் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

சமீபத்திய ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்காவில் நடக்கும் தாக்குதல்களுக்கு பெரும்பாலும் இஸ்லாமியவாதக் குழுக்களே காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

அல்-கய்தா, இஸ்லாமிய அரசு அமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் மற்றும் உள்ளூரின் அன்சருள் இஸ்லாம் அமைப்பின் ஆயுதப் போராளிகள் இங்கு செயல்பட்டு வருகின்றனர். -BBC_Tamil