பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் மூன்று துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் பல பில்லியன் டாலர்கள் மதிப்பு மிக்க திட்டத்தின் மைய பகுதியாக திகழும் க்வாடர் துறைமுக நகரத்திலுள்ள சாவேர் பேர்ல்-கான்டினென்டல் ஹோட்டலில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தேறியுள்ளது.
ரமலான் மாதம் அனுசரிக்கப்பட்டது வருவதால் விடுதியில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லையென்றும், குறைந்தளவிலான விடுதி பணியாளர்கள் மட்டுமே இருந்ததாகவும் அதன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சீனர்கள் மற்றும் மற்ற முதலீட்டாளர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக பிரிவினைவாத அமைப்பான ‘பலூசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி’ தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த அமைப்புடன் தொடர்புள்ளதாக கூறிக்கொள்ளும் ட்விட்டர் கணக்கு ஒன்றின் சமீபத்திய பதிவில், ‘சீனா மற்றும் பாகிஸ்தான் மீது மேலதிக தாக்குதலை எதிர்பாருங்கள்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பலூசிஸ்தான் மாகாணத்தில் சீனா மேற்கொள்ளும் முதலீடுகளால் உள்ளூர் மக்களுக்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு பலனேதுமில்லை என்று அங்குள்ள ஆயுதத்தாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். -BBC_Tamil