பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவில் பிறந்த சகோதரர்கள் முதலிடம்

பிரிட்டனின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்துஜா சகோதரர்கள் மூன்றாவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளனர்.

சண்டே டைம்ஸ் நாளிதழ் இந்த பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் இந்துஜா இருவரும் கடந்த ஆண்டில் 1.356 பில்லியன் பவுண்டுகள் லாபத்துடன் மொத்தம் 22 பில்லியன் பவுண்டுகள் மதிப்பில் இருப்பதாக அந்நாளிதழ் கணக்கிட்டுள்ளது.

கடந்தாண்டு பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்த ரசாயன நிறுவனத்தின் உரிமையாளர் ஜிம் ரேட்கிளிஃப் இந்தாண்டு மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மேலும், இப்பட்டியலில் உள்ள வேலரி மோரன், முதன்முறையாக இதில் இடம்பெற்றுள்ள கறுப்பின பெண் தொழிலதிபர் ஆவார்.

இந்துஜா குழுமம் 1914ஆம் ஆண்டு மும்பையில் நிறுவப்பட்டது. தற்போது உலகளவில் வளர்ந்துள்ள இக்குழுமம் எண்ணெய், எரிபொருள், வங்கி, தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் இயங்கி வருகிறது.

இதனை நடத்தி வரும் நான்கு சகோதரர்களில், 83 வயதாகும் ஸ்ரீசந்த் மற்றும் 79 வயதாகும் கோபிசந்த் இருவரும் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்கள் ஆவர்.

இவர்கள் இருவரும் 2014 மற்றும் 2017ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தனர்.

1.ஸ்ரீ மற்றும் கோபி இந்துஜா (தொழில் மற்றும் நிதித்துறை) – 22 பில்லியன் பவுண்டுகள்

2.டேவிட் மற்றும் சைமன் ரூபன் (சொத்து மற்றும் இணையம்) – 18.7 பில்லியன் பவுண்டுகள்

3.சர் ஜிம் ரேட்கிளிஃப் (ரசாயனம்) – 18.2 பில்லியன் பவுண்டுகள்

4.சர் லென் ப்ளவட்னிக் (முதலீடு, இசை மற்றும் ஊடகம்) – 14.4 பில்லியன் பவுண்டுகள்

5.சர் ஜேம்ஸ் டைசன் மற்றும் அவரது குடும்பத்தினர் (வீட்டுப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம்) – 12.6 பில்லியன் பவுண்டுகள்

6.கிர்ஸ்டன் மற்றும் ஜோர்ன் ரௌசிங் (குடும்ப சொத்து மற்றும் முதலீடு) – 12.3 பில்லியன் பவுண்டுகள்

7.சார்லீன் டி கர்வல்ஹோ – ஹைன்கின் (குடும்பச் சொத்து, மது மற்றும் வங்கி) – 12 பில்லியன் பவுண்டுகள்

8.அலீஷர் உஸ்மனோவ் (சுரங்கத் தொழில் மற்றும் முதலீடு) – 11.3 பில்லியன் பவுண்டுகள்

9.ரோமன் அப்ரோமோவிச் (எண்ணெய் மற்றும் தொழில்துறை) – 11.2 பில்லியன் பவுண்டுகள்

10.மிக்ஹெல் ஃபிரிட்மன் (தொழில்துறை) – 10.9 பில்லியன் பவுண்டுகள்

பிரிட்டனில் உள்ள முதல் 1000 பணக்கார நபர்களை, அவர்களது நிலம், சொத்து, கலைப் பொருட்கள் போன்ற பிற சொத்துகள், நிறுவனங்களில் உள்ள பங்குகள் ஆகியவற்றை வைத்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டதாக சண்டை டைம்ஸ் நாளிதழ் கூறுகிறது.

இதில் அவர்களது வங்கி கணக்கில் உள்ள பணம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. -BBC_Tamil